ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே ரவுடி கும்பல் வெறிச்செயல் : அமைச்சர்,வேட்பாளரை பாட்டில் வீசி கொல்ல முயற்சி…

ராமநாதபுரம்:-

ராமநாதபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ரவுடி கும்பல் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த தாக்குதலில் மண்டை உடைந்த கழக நிர்வாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் கழக கூட்டணி வேட்பாளராக பா.ஜ.க. சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இதையடுத்து வேட்பாளரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் கூட்டணி கட்சியினருக்கு அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். செல்லும் இடமெல்லாம் அமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதனை தாங்கி கொள்ள முடியாத திமுகவினர் தனது கைக்கூலிகளை கொண்டு கழக நிர்வாகிகள் மீது கற்களை வீசி எறிந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 10.45 மணியளவில் பெரியபட்டிணம் கிராமத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் ரவுடி கும்பலை சேர்ந்த மறைந்திருந்து பிரச்சார வாகனத்தை நோக்கி கண்ணாடி பாட்டில்களை வீசியெறிந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இருந்து அமைச்சர் எம்.மணிகண்டன், நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இருப்பினும் அருகில் இருந்த திருப்புல்லாணி ஒன்றிய கழக அவைத்தலைவர் உடையத்தேவன் தலையில் கண்ணாடி பாட்டில்களை எறிந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழியத்தொடங்கியது. ஆபத்தான நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அமைச்சரின் உதவியுடன் கழக நிர்வாகிகள் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கழக கூட்டணியின் பிரச்சாரத்தை சீர்குலைக்க கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் ரவுடி கும்பல் பாட்டில்களை வீசியெறிந்த சம்பவம் பெரியபட்டிணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.