சிறப்பு செய்திகள்

ரூ.1340.44 கோடியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைத்தார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், 2018-19-ஆம் கல்வியாண்டில் 15 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு 1,340 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கான புதிய பாதையினை ஏற்படுத்திட, இன்றைய உலகில் மாணவ சமுதாயத்தினருக்கு மடிக்கணினி ஒரு இன்றியமையா கல்விச் சாதனமாக உள்ளது என்பதை அறிந்து, ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் வாழ்கின்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளும் வளர்ந்து வரும் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் வெற்றிபெற்றிட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான 15.9.2011 அன்று திருவள்ளூர், காக்களூரில் நடைபெற்ற அரசு விழாவில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மூலமாக 2011-12ஆம் ஆண்டு முதல் 2017-18 ஆம் ஆண்டு வரை 37,88,528 மாணவ, மாணவிகளுக்கு 5,552 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

2018-19ஆம் ஆண்டு, முதற்கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் வழங்கப்பட்டு வந்த மடிக்கணினிகளை ஓராண்டுக்கு முன்னதாக பதினொன்றாம் வகுப்பிலேயே வழங்கிட புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முடிவெடுத்ததின் அடிப்படையில், 2018-19-ஆம் ஆண்டில் பதினொன்றாம் வகுப்பு படிக்கின்ற 5.12 லட்சம் மாணாக்கர்கள் உட்பட, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கின்ற மாணாக்கர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில் நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணாக்கர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத்திறனாளி பள்ளிகளில் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்கள், என மொத்தம் 15.18 லட்சம் மாணாக்கர்களுக்கு 1,340 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று 7 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் சந்தோஷ்பாபு, மிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.விஜயகுமார், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முனைவர் வி.சி. இராமேஸ்வரமுருகன், சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை இயக்குநர் முனைவர் கே.இராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.