தற்போதைய செய்திகள்

ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கும் திட்டம் ஓரிரு நாளில் தொடக்கம் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்…

திருவாரூர்:-

ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கும் திட்டம் ஓரிரு நாளில் தொடங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் 165-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள உத்தமதானபுரத்தில் உள்ள உ.வே.சாமிநாதய்யர் இல்லத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சரிடம் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2000 சிறப்பு நிதி பெறுவதில் சிரமம் உள்ளதாக கூறப்படுகிறதே? அனைவருக்கும் சிறப்பு நிதி வழங்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்து கூறியதாவது:-

தமிழக அரசு தொழிலாளர்கள் அனைவருக்கும் சிறப்புநிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. முதல்வர் அறிவித்திருந்த இந்த சிறப்பு நிதியை பெற அனைத்து வகை தொழிலாளர்களும் தகுதியுடையவர்கள். நானும் மற்ற சில அமைச்சர்களும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, தொழிலாளர்களாகிய தங்களுக்கும் சிறப்புநிதி கிடைக்குமா? என்று பொதுமக்கள் ஐயப்பாடுகளை எழுப்பினர். பொதுமக்களின் ஐயப்பாடுகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

அவ்வாறு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, சிறப்புநிதி வழங்குவதில் தொழிலாளர்கள் யாரும் விடுபட மாட்டார்கள். தகுதியுடைய அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் இந்த சிறப்பு நிதி வழங்கப்படும்.இந்த பயனாளிகள் பட்டியலில் தகுதியுடைய தொழிலாளர்களின் பெயர் விடுபட்டிருந்தாலும் யாரும் கவலைப்பட வேண்டாம்.

தொழிலாளர்கள் யாரேனும் விடுபட்டு இருந்தால் அவர்களிடம் மீண்டும் மனுக்கள் பெறப்பட்டு, விசாரணை அடிப்படையில் அவர்களுக்கும் சிறப்புநிதி வழங்கப்படும் என முதல்வர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார். ஓரிரு தினங்களில் இந்த சிறப்புநிதி வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.