சிறப்பு செய்திகள்

ரூ.2000 சிறப்பு நிதி வழங்க முட்டுக்கட்டை, அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தவே நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு – துணைமுதல்வர் குற்றச்சாட்டு…

ராமநாதபுரம்:-

60 லட்சம் பேருக்கு தலா 2000 வழங்க திட்டமிட்ட கழக அரசுக்கு நற்பெயர் வந்துவிடக்கூடாதென்று பயந்து உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடுத்தார் என்று ராமநாதபுரத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் நாடாளுமன்ற கூட்டணி கட்சி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் பரமக்குடி (தனி)சட்டமன்ற வேட்பாளர் சதன் பிரபாகரனை ஆதரித்து ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்ய வருகை புரிந்தார்.

மாவட்டத்தின் எல்லையான பார்த்திபனூரில் கழக ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மற்றும் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ முனியசாமி ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேளங்கள் கொட்டி,சங்க நாதங்கள் முழங்க துணை முதல்வருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், வாழ்க கோஷம் எழுப்பியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பரமக்குடி வருகை தந்த துணை முதல்வர் மக்கள் மத்தியில் பரமக்குடி இடைத்தேர்தல் வேட்பாளர் சதன் பிரபாகரன், நாடாளுமன்ற வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை அறிமுகப்படுத்திபரமக்குடியில் ஆற்றிய உரை பின்வருமாறு:-

பரமக்குடியில் நடைபெறும் இடைத்தேர்தல் ஏன் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் திமுக என்ற குடும்ப கட்சியின் ஆதிக்கத்தின் காரணம் தான் என்பது இப்பகுதி மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். திமுகவின் ஆட்சி பறிபோனதற்கு காரணம் என்ன என்று சொன்னால் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தொடர் மின்வெட்டுதான் இதன் காரணமாக திமுக ஆட்சியை இழந்தது. மின்வெட்டு காரணமாக திமுக ஆட்சியை இழக்குமென்றுஆற்காடு வீராசாமி அன்றே சொன்னார். நமது புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் மின்வெட்டு படிப்படியாக குறைந்து தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறி உள்ளது.

நம் பாரத பிரதமர் மோடியை ஏன் மீண்டும் பிரதமராக கொண்டு வரவேண்டும் என்று சொன்னால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீண்டும் விளையாட அனுமதி பெற்றுத் தந்தவர். திமுக-காங்கிரஸ் ஆட்சியின்போது ஜல்லிக்கட்டு விளையாட்டினை விலங்கு வதை பட்டியலில் சேர்த்து தமிழர்களின் உரிமையை பறித்தார்கள். நரேந்திரமோடி நமது கோரிக்கையை ஏற்று நமது பாரம்பரிய விளையாட்டினை பெற்றுத்தந்தார். மதுரையில் 1,200 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர அடிக்கல் நாட்டினார்.

மோடியை மீண்டும் நாம் பிரதமராக பெற்றோமே ஆனால் நாம் கேட்கும் எண்ணற்ற திட்டங்களையும் நமது மாநிலத்திற்கு கொண்டு வர முடியும். 60 லட்சம் பேருக்கு தலா 2000 வழங்க திட்டமிட்ட அரசு நமது கழக அரசு. நமது அரசுக்கு நற்பெயர் வந்துவிடக்கூடாதென்று பயந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஸ்டாலின். சிறுபான்மை மக்களுக்கு புரட்சித்தலைவர் காலம் முதல் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவது கழகம் தான். இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான ஹஜ் யாத்திரை செல்வதற்கும், கிறிஸ்தவர்களின் புனித தலமான ஜெருசலேம் செல்வதற்கும் எண்ணற்ற உதவிகளையும், சலுகைகளையும் வழங்கியது நமது கழக அரசு உலமாக்களுக்கு ஓய்வூதியம் வழங்கி அவர்களை சிறப்படைய செய்தது நமது கழக அரசு.

ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காணாமல் போகும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு ஆலமரம் போன்றது. ஒன்றரை கோடி தொண்டர்களும் விழுதுகளாக உள்ளனர் எங்கள் இயக்கத்தை அசைத்து பார்க்க கூட முடியாது கருணாநிதியால் கூட முடியாத இந்த வித்தை ஸ்டாலினால் நிச்சயம் முடியாது.

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது நில அபகரிப்பு, பிரியாணி கடைகளிலும், புரோட்டா கடைகளிலும் சண்டையிடுவதும்,பெண்கள் நடத்தும் பியூட்டி பார்லர்களில் மாமூல் கேட்டு மிரட்டுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு என்ன நிலைமைக்கு வரும் என்று மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்..? குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட மக்கள் சிந்திக்க வேண்டும் இந்த மாவட்ட மக்கள் வீரம் நிறைந்தவர்கள் என்பது வரலாறு. இந்த மாவட்டத்தில் திமுகவினரின் அராஜகம் எடுபடாது.

இதயதெய்வம் அம்மா 2011-ல் ஆட்சி பொறுப்பில் ஏற்ற பின் நல்லதொரு திட்டங்களையும், தொலைநோக்கு திட்டங்களையும், எதிர்கால சந்ததிகளுக்கு பயன்தரக்கூடிய திட்டங்களையும் தந்தவர் ஏழை குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசியை இலவசமாக தந்தார் உண்ண உணவு உடுக்க உடை இருக்க இருப்பிடம் தந்தவர்.அம்மா ஆட்சியில் நாடு அமைதிப் பூங்காவாக காட்சி அளித்தது தற்போது அம்மா வழியில் செயல்படும் கழக அரசு அவர்கள் வழியியையே பின்பற்றுகிறது. குறிப்பாக தாலிக்கு தங்கம் 4 கிராமாக இருந்ததை 8 கிராமாக உயர்த்தி உள்ளது. பெண்களுக்கு ஸ்கூட்டி, மகப்பேறு காலத்தில் விடுமுறையுடன் கூடிய ஊதியம், குழந்தைகள் நல பரிசு பெட்டகம் உட்பட எண்ணற்ற நலத்திட்டங்களை பெண்களுக்கு அளித்து அவர்களின் வாழ்வில் ஒளி விளக்கை ஏற்றி வைத்தார் அம்மா.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக போர் தொடுத்த ராஜபக்சேயுடன் பரிசுபெற சென்றவர்கள்தான் திமுகவில் உள்ளவர்களும் ஸ்டாலின் உடன்பிறந்தவர்களும் அதை தமிழர்கள் மறக்கமாட்டார்கள். 10 ஆண்டுகள் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது தமிழக அமைச்சர்கள் 10 பேர் டெல்லியில் இருந்தார்கள் தமிழக மக்களுக்கு என்ன நலத்திட்டங்கள் செய்தார்கள்..? 40 ஆயிரம் கோடி ரூபாய் சேதுசமுத்திரத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கினார்கள் அந்த நிதி யார் குடும்பத்திற்கு ஒதுக்கினார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்..! டீக்கடையில் டீ குடித்து ஸ்டாலின் விளம்பரம் தேடுகிறார் டீக்கடையில் டீ குடிப்பது என்பதில் என்ன ஆச்சரியம் உள்ளது..? நானும்தான் டீக்கடை நடத்தியவன்.

மின்வெட்டால் திமுக ஆட்சி இழந்தது, ரவுடி தனத்தால் தனது கட்சியையும் இழக்கும். அம்மா ஆட்சி நடப்பதால் தான் ஸ்டாலின் மதுரையில் சுதந்திரமாக நடமாட முடிகிறது. இத்தேர்தலில் மக்களாகிய நீங்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் நமது நாடாளுமன்ற வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்திலும், பரமக்குடி(தனி) சட்டமன்ற வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கு இரட்டைஇலை சின்னத்திலும் வாக்களித்து மகத்தான வெற்றியை நீங்கள் பெற்று தர வேண்டும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.