தற்போதைய செய்திகள்

ரூ.30 கோடியில் வனத்துறை தலைமை அலுவலக கட்டடம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 27.2.2019 அன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் சென்னை, வேளச்சேரியில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வனத்துறை தலைமை அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

வனத்துறை தலைமை அலுவலகம் தற்போது சென்னை, பனகல் மாளிகையில் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, வேளச்சேரியில் அமைந்துள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வனத்துறை தலைமை அலுவலகக் கட்டடம் கட்டப்படும் என்றும், வனச் சரகங்களுக்கு 125 புதிய ஜீப்புகள் வழங்கப்படும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 1.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, சென்னை, வேளச்சேரியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 1,10,000 சதுர அடி கட்டட பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன், அதிநவீன வசதிகளுடன் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வனத்துறை தலைமை அலுவலகக் கட்டடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளையும், வன விலங்குகளையும் பாதுகாப்பது, மனிதர்களுக்கும், வன விலங்குகளுக்கும் மோதல் ஏற்படாமல் தடுப்பது, வனங்களில் தீத்தடுப்புப் பணி, வேட்டை மற்றும் கடத்தல் தடுப்புப் பணிகள், வனப்பரப்பை அதிகரிக்கும் அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவது போன்ற பல்வேறு பணிகளை வனத்துறையினர் ஆற்றி வருகிறார்கள். வனத்துறையினர் அரசின் திட்டங்களை விரைவாகவும், செம்மையாகவும் செயல்படுத்திட ஏதுவாக, வனச்சரகங்கள் பயன்பாட்டிற்காக 9 கோடியே 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவில் 125 புதிய ஜீப்புகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 7 வனத்துறை வாகன ஓட்டுநர்களுக்கு ஜீப்புகளுக்கான சாவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) டாக்டர் எச்.மல்லேசப்பா, சென்னை மண்டல தலைமை வனப் பாதுகாவலர் கருணப்பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.