தற்போதைய செய்திகள்

ரூ.32.50 கோடியில் பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணி – அமைச்சர்கள் பா.பென்ஜமின், சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தனர்…

செங்கல்பட்டு:-

திருக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினம்-வாயலூர் பாலாற்றில் ரூ.32.50 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

செங்கல்பட்டை அடுத்துள்ள வாயலூர் பாலாற்றில் தடுப்பணை அமைக்கக் கோரி, முன்னாள் எம்எல்ஏ தனபால், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கிங் உசேன் மற்றும் வணிகர் சங்கத்தினர், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களைக் கொடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி பல போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்று, பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்காக கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையப் பங்களிப்பின் மூலம் ரூ.32.50 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இதில், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர். இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மக்களவை உறுப்பினர் மரகதம் குமரவேல், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலைய இயக்குநர் அருண்குமார், கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குநர் ஸ்ரீநிவாஸ், நிர்வாக அதிகாரி சுரேஷ், தலைமைப் பொறியாளர் மனோகரன், மாவட்ட வருவாய் அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் ஸ்ரீதர், அதிமுக மாவட்டச் செயலர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழு தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ஈசூர்-வல்லிபுரம் பாலாற்றுத் தடுப்பணைக்கு ரூ.30.99 கோடி மதிப்பில் ஏற்கெனவே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தற்போது, ரூ.32.99 கோடி மதிப்பில் கட்டப்படும் வாயலூர் பாலாற்றுத் தடுப்பணை மூலம் சுமார் 9 கி.மீ. நீளத்துக்கு நீர் தேக்கி வைக்கப்படும்.

இதனால், ஏறத்தாழ 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கோடைக் காலத்தில் குடிநீர் வசதி மேம்படுத்தப்படும். பொதுப் பணித்துறை சார்பில் குடிமராமத்து பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. இதேபோல், தென்பெண்ணை ஆற்றில் 5 தடுப்பணைகள் கட்ட ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

விழாவில், சாலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு இயக்குநர் எஸ். ஆறுமுகம், முன்னாள் மக்களவை உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் தனபால், ராஜு, வாலாஜாபாத் பி.கணேசன், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் என்.என்.தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.