தற்போதைய செய்திகள்

ரூ. 332.45 கோடியில் சாலை பணி, மேம்பாலம் 4 சுற்றுப்பாலங்கள், ரயில்வே சாலை மேம்பாலம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திருநெல்வேலி, விருதுநகர், கடலூர், திருவாரூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 332 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலைப் பணி, 4 ஆற்றுப்பாலங்கள் மற்றும் இரயில்வே கடவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை புரட்சித் தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செய்து வருகிறது.

அந்த வகையில், திருநெல்வேலி, இராஜபாளையம் மற்றும் சங்கரன்கோவில் நகரங்களில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் 286 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 75.288 கிலோ மீட்டர் நீள இராஜபாளையம், சங்கரன்கோவில் மற்றும் திருநெல்வேலி சாலைப் பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

திருவாரூர் மாவட்டம், வையகளத்துhரில் உள்ள நீடாமங்கலம் – கொரடாச்சேரி இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கடவுக்கு மாற்றாக 27 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்.விருதுநகர் மாவட்டம், சித்துராஜபுரம் – விளாம்பட்டி சாலையில் போட்ரெட்டியாபட்டியில் காட்டு ஓடையின் குறுக்கே 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், ஆமத்தூர் – லெட்சுமியாபுரம் சாலையில் ரெங்கபாளையத்தில் காட்டு ஓடையின் குறுக்கே 1 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்,

கடலூர் மாவட்டம், நல்லூர் – இலங்கியனூர் சாலையில் மணிமுக்தாறு ஆற்றின் குறுக்கே 12 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்,திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில், பம்மதுகுளம் உபரி நீர் கால்வாயின் குறுக்கே 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்,என மொத்தம், 332 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன்,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) எஸ். கே. பிரபாகர், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் திட்ட இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) டாக்டர் அருண் தம்புராஜ், தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச்சாலைகள்) எம். கே. செல்வன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.