தற்போதைய செய்திகள்

ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடம் கட்டும் பணி – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்…

திருப்பூர்:-

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் வலிமையூட்டல் கூடுதல் கட்டடம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மருத்துவத்துறையில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் சிகிச்சைகளுக்காக பல்வேறு வகையான வசதிகள் தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், நமது உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் சுமார் 23, 413 சதுரஅடி பரப்பளவில் இரண்டு தளங்களுடன், 100 படுக்கை வசதிகளுடன் கூடிய பல்வேறு சிகிச்சைகள் பெறும் வகையில் புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் 25.02.2019 அன்று சிறப்பான முறையில் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இக்கட்டிடம் கூடுதலாக இரண்டு தளங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் டயாலிசிஸ் கருவி மற்றும் சி.டி.ஸ்கேன் கருவிகளும் விரைவில் திறக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவத்துறையில் மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பது போன்று கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அனைத்து கால்நடைகளுக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கவும் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் நாமக்கல் ஆகிய பகுதிகளில் கால்நடைகளை பரிசோதனை செய்ய சி.டி.ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு அம்மாவின் அரசு முனைப்புடன் செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொடர்ந்து குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமவாரப்பட்டி, தொட்டம்பட்டி மற்றும் ஆமந்தகடவு ஆகிய பகுதிகளில் தலா ரூ.24.00 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய துணை சுகாதார நிலையக் கட்டிடம் கட்டும் பணிகளையும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது, உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.கோமதி, தலைமை மருத்துவ அலுவலர் மரு.முருகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிபொறியாளர் ஜெயக்குமார், திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் மனோகரன், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள் துரையரசன், குமரவேல், உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் ப.தங்கவேல், அரசு அலுவலர்கள, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.