தற்போதைய செய்திகள்

ரூ.789.16 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 27.2.2019 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 105 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோயில் மற்றும் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 295 குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட மற்றும் 315 வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம், நகராட்சி நிர்வாக ஆணையரகம், பேரூராட்சிகள் இயக்ககம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் 683 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கட்தொகைக்கேற்ப குடிமைப் பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதிகளை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமைகளாகும். இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், கழிவு நீரை அகற்றிடவும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 105 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோயில் மற்றும் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 295 குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட மற்றும் 315 வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலம், சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோயில் மற்றும் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 3,39,000 மக்கள் பயனடைவர்.

மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி பேரூராட்சிக்கு 21 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சிக்கு 10 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு 68 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள்.

தேனி மாவட்டம், வடுகபட்டி பேரூராட்சி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 57 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் பெரியகுளத்திலுள்ள தோட்டக்கலைக் கல்லூரி ஆராய்ச்சி மையம், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டு பேரூராட்சி ஆகிய பகுதிகள் பயன்பெறும் வகையில் 45 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்; திருப்பூர் மாவட்டம் – வெள்ளகோயில் காங்கேயம் நகராட்சிகள், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 528 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் 91 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், திருப்பூர் மாவட்டம் – வெள்ளகோயில், மூலனூர், தாராபுரம், குண்டடம், காங்கேயம் ஒன்றியங்கள் மற்றும் ஈரோடு மாவட்டம் – சென்னிமலை ஒன்றியங்களை சேர்ந்த 1262 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் 91 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்; தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் நகராட்சிக்கு 71 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டப் பணிகள்.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் சார்பில் சென்னை மாவட்டம், உள்ளகரம்-புழுதிவாக்கம் பகுதிக்கு 34 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டப் பணிகள். நகராட்சி நிர்வாக ஆணையரகம் சார்பில் கடலூர் நகராட்சி வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டடம், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி, பூங்கா கிழக்கு தெரு பகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டடம் மற்றும் திருவாரூர் நகராட்சி, நாகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தியாகப்பெருமாநல்லூர் பகுதியில் 13 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம்.

பேரூராட்சிகள் இயக்ககம் சார்பில் கரூர் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரூராட்சி அலுவலகக் கட்டடம்; சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரூராட்சி அலுவலகக் கட்டடம்; வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பேரூராட்சி பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள்நோயாளிகளுடன் வரும் உடனாளர்கள் தங்குவதற்கான தங்குமிடம்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அம்ருத் திட்டத்தின் கீழ் மணலி மண்டலத்திற்குட்பட்ட சடையங்குப்பத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பேஸ்-2, சி.பி.சி.எல். லேஅவுட்; மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட வி.எஸ். மணி நகர் பேஸ்-1, பேஸ்-2 மற்றும் பேஸ்-3; அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட சி.டி.எச். சாலை, சிட்கோ சாலை, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அருகில் மற்றும் அக்னி எஸ்டேட், ஐ.சி.எப். காலனி கோதாவரி தெரு, பாடியில் உள்ள சி.டி.எச். சாலை, அம்பத்தூர் பூங்கா சாலை, கண்டிகை சாலையில் உள்ள தாமரைக் குளம்;

அடையாறு மண்டலத்திற்குட்பட்ட திருவீதியம்மன் சாலை; சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட சௌடேஸ்வரி நகர் பிரதான சாலை, காரப்பாக்கத்தில் உள்ள சடகோபன் தெரு, பழைய பாண்டிச்சேரி சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஈ-17 சாலை, ஜெயச்சந்திரன் நகர் 1வது பிரதான சாலை திறந்தவெளி நிலம், துரைப்பாக்கம் பாலமுருகன் கார்டன் திறந்தவெளி நிலம்; வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட நொளம்பூர் திட்டப்பகுதி-2யில் உள்ள 13வது குறுக்கு தெரு மற்றும் ராமாபுரம் ராயலா நகர் 1வது பிரதான சாலை; தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட நேப்பியர் பாலம் அருகில் காமராஜர் சாலை (போக்குவரத்து பூங்கா) ஆகிய இடங்களில் 19 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 21 பூங்காக்கள்.

திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட திருவொற்றியூர் மணலி சாலையில் 5 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வாகன இயக்கூர்தி நிலையம்; மணலி மண்டலத்திற்குட்பட்ட காமராஜர் சாலையில் 9 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மணலி மண்டல அலுவலகக் கட்டடம்; தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கம் பேருந்து முனையத்திற்கு 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிழற்குடை,

கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டையில் சலவையாளர்களின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓய்வறைகள்; தேசிய நகர்ப்புற சுகாதார நிதியின் கீழ், தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட விவேகானந்தா நகர் மற்றும் சர்மா நகரில் 2 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டடங்கள்; வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட சின்ன போரூர் மருத்துவமனை சாலையில் 11 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற சமூக நல மருத்துவமனை;

அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கிண்டி தொழிற்பேட்டை தெற்கு பகுதி, பிளாக்-5ல் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டடம்; பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பள்ளிச்சாலையில் 11 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற சமூக நல மருத்துவமனை; சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட கண்ணகி நகர், 2வது பிரதான சாலையில் 9 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டடம்;

மூலதன நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கும்மாளம்மன் கோயில் தெருவில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம்; சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பெரம்பூர் பள்ளி சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன அரங்கம் மற்றும் மிதிவண்டி நிறுத்துமிடம்; பாராளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட காரணீஸ்வரர் பகோடா தெருவில் 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூக நலக்கூடம் மற்றும் கூடுதல் அறைகள்.

சென்னை மாநகரில் அதிக திறன் கொண்ட சோடியம் ஆவி விளக்குகள் மற்றும் இதர தெரு விளக்குகளை 141 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊயயீவையட ழுசயவே குரனே மற்றும் மூலதன நிதியின் மூலம் மின் சேமிப்பு வகை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றி அமைக்கும் பணி என மொத்தம் 789 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 50 திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சென்னை மாநகர் முழுவதும் திருவாளர்கள் ஸ்மார்ட் பைக் மொபிலிட்டி தனியார் நிறுவனத்தால், பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் மிதிவண்டி பகிர்மான திட்டத்தை முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்த மிதிவண்டி பகிர்மான திட்டத்தின் மூலம், பொதுமக்களிடையே மோட்டார் வாகனம் அல்லா போக்குவரத்தை ஊக்குவிப்பதோடு, பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் பெரிதும் பயனடைவர்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 200 வாரிசுதாரர்களுக்கு, மலேரியா பணியாளர், சாலைப் பணியாளர், பூங்கா பணியாளர், காவலர், பெண் உதவியாளர், அறுவை அரங்க உதவியாளர், ஆயா, பெண் தொழிலாளி மற்றும் தொழிலாளி ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 7 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அரசு தலைமைக் கொறடா எஸ்.இராஜேந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய மேலாண்மை இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக் டோங்ரே, நகராட்சி நிர்வாக ஆணையர் முனைவர் டி.கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் முனைவர் சி.என்.மகேஸ்வரன், பேரூராட்சிகள் இயக்கக இயக்குநர் எஸ்.பழனிசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.