தற்போதைய செய்திகள்

வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் வாகைத்தாய் பொற்பாதங்களில் வெற்றிக் கனிகளை கொய்து வந்து சமர்ப்பிக்க வீர சபதமேற்போம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சூளுரை…

சென்னை:-

வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் வாகைத்தாய் பொற்பாதங்களில் வெற்றிக்கனிகளை கொய்து வந்து சமர்ப்பிக்க வீர சபதமேற்போம் என்று சென்னையில் நடைபெற்ற அம்மா பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சூளுரைத்தார்.

கழக அம்மா பேரவை சார்பில் கழக அரசின் 2 ஆண்டு சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறுவது, வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கழகம் மகத்தான வெற்றி பெறுவது குறித்து அம்மா பேரவை சார்பில் சென்னை திருவான்மியூரில் நேற்று ஆலோசனை கூட்டம் மற்றும் அம்மா அவர்களின் 71வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெயவர்தன், டாக்டர் மைத்ரேயன், கழக அமைப்பு செயலாளர் எஸ்.கோகுலஇந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி அம்மா பேரவை மாநில செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

அம்மா உயிரை தந்து உருவாக்கித் தந்த அம்மாவின் ஆட்சியை உயிராக நேசித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சாதனை புரிந்து வருகிறார், அம்மாவின் ஆன்மா வழிகாட்டுதலில் கனிவும் துணிவும் கொண்டு முதல்வர் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். ஒரு குடும்பத்தை நடத்துவது எப்படிப்பட்ட சாதனை என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இரண்டரை கோடி குடும்பங்களை வழிநடத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதனை படைத்து வருகிறார், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்ட வைத்ததும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி 3 லட்சத்திற்கும் மேலாக டமுதலீடுகளை திரட்டியும் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்

இந்த ஆட்சி இரண்டு நாட்கள் தாக்கு பிடிக்குமா என்று கேட்டவர்கள் மத்தியில் இரண்டு ஆண்டுகளை கடந்து முதல்வர் சாதனை படைத்துள்ளார். இவர்கள் கூட்டணி அமைக்க முடியுமா என்று கேட்டவர்கள் வியக்கும் வண்ணம் மெகா கூட்டணி ஒன்றை அமைத்து எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார் முதல்வர். திமுக., பா.ம.க கூட்டணி என்று பத்திரிகைகள் கேள்வி போட்டதை, அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி என்று ஆச்சரியக்குறி எழுப்பி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதனால் மு.க.ஸ்டாலின் வயிற்றெரிச்சலால் புலம்பி வருகிறார். சமூக நீதிக்காக பாடுபட்டு வருபவர் பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ், 69 சதவீத இடஒதுக்கீட்டை 9 அட்டவணையில் சேர்த்து சமூக நீதியை பெற்றுத் தந்த அம்மாவின் அ.தி.மு.க.வையும் ஒருங்கிணைத்த கூட்டணி அதிமுக- பா.ம.க கூட்டணி,

நாம் இப்போது மக்களாட்சிக்கு வந்திருக்கிறோம், ஆனால் தேசியக்கட்சியான காங்கிரஸ் மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு,
சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி என்று ஒரே குடும்பத்தின் அடிமை சாசனத்திற்கு அழைத்து செல்லும் காங்கிரசுடன் திமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது. கொலைப்பழி சுமத்தி வைகோவை வெளியேற்றியவர்கள், இப்போது கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். வலதும் இடதும் அம்மாவின் கரம் பற்றி அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்திருந்தனர். இப்போது அவர்கள் தி.மு.க.வுடன் கரம் பற்றியிருக்கின்றனர். எனவே அ.தி.மு.க கூட்டணி பற்றி விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை.

அதிமுக கூட்டணி என்பது மத்திய அரசிடமிருந்து மக்களுக்கு தேவையான நிதியை பெற்றுத் தருவதற்குரிய கூட்டணி. தி.மு.க கூட்டணி என்பது பூஜ்ய கூட்டணி. அ.தி.மு.க உருவாக்கும் கூட்டணி தான் நிலையான கூட்டணி. ஸ்டாலின் மாதிரி கிராம சபை, நடத்துகிறார். மாதிரி சட்டமன்றம் நடத்துகிறார். ஸ்டாலின் ஒரு மாதிரி ஆகிவிட்டார். கருணாநிதி தவப்புதல்வர் ஸ்டாலின் ஒரு மாதிரி பேசுகிறார் என்று நான் கேட்கவில்லை,. மக்கள் கேட்கின்றனர். அதுமட்டுமின்றி தனது பகல் கனவு பலிக்கவில்லை என்கிற காரணத்தால் தான் சட்டமன்றத்தில் சட்டை, வேட்டியை ஸ்டாலின் கிழித்துக் கொண்டார். வருங்காலங்களில் பதவிவெறியில் உள்ளாடைகளை கிழித்துக் கொள்ளும் நிலைக்கும் அவர் செல்வார். அம்மா மறைவுக்கு பின்னர் ஆட்சிக்கு வரலாம் என்று நினைத்தார் ஸ்டாலின். அது வெறும் கனவாக போனது. அதனால் ஆடைகளை கிழிக்கும் நிலைக்கு வந்து விட்டார்.

பதவி ஆசை அவரை இந்த நிலைக்கு இட்டுச் சென்று விட்டது. இலவு காத்த கிளியாக கனவு கண்ட ஸ்டாலினின் கனவுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பொய்யாக்கி விட்டனர். ஒரு ஸ்டாலின் அல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், எடப்பாடி தலைமையிலான ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது. 2 ஆண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது. வெற்றிக்கனிகளை கொய்து வந்து வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் வாகைத்தாய் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க வீர சபதமேற்போம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.