உலகச்செய்திகள்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல்…

சியோல்:-
கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதை எச்சரிக்கும் விதமாக வடகொரியா இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கியது. இதனால் அமெரிக்கா, வடகொரியா நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தான் இந்த அணு ஆயுத விவகாரங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும், அவர் ஒரு கொடிய விஷம் என்றும் வட கொரிய வெளியுறவு மந்திரி ரி யோங் ஹோ நேற்று கூறினார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் அல்லது போட்டிக்கும் தயார் என எனவும் கூறினார்.
இந்நிலையில் வடகொரியா சிறிய ரக இரு ஏவுகணைகளை இன்று கடலில் செலுத்தி சோதனை செய்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணைகள் அதிகபட்ச வேகத்தில் 380 கிலோ மீட்டர் தொலைவு பறந்து, 97 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து கிழக்கு கடல் பகுதி அதாவது ஜப்பான் கடலில் விழுந்துள்ளது, என தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு வடகொரியாவில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டபோது, புதிய ஏவுகணைகள் சோதனை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை ஆகும், என வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.