திருவண்ணாமலை

வந்தவாசி அருகே வரலாற்று நிபுணர்கள் ஆய்வு – ராஜராஜசோழன் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு…

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தில் ராஜராஜசோழன் காலத்து கல்வெட்டு உள்ளிட்ட மூன்று கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தில் ராஜராஜசோழன் காலத்து கல்வெட்டு உள்ளிட்ட மூன்று கல்வெட்டுகள் உள்ளதாக வரலாற்று ஆசிரியர் கே.செல்வகுமார் திருவண்ணாமலையில் உள்ள வரலாற்று ஆய்வு நடுவகத்தில் தகவல் தெரிவித்ததின் பேரில் வரலாற்று ஆய்வு நடுவகத்தின் வரலாற்று ஆய்வாளர்கள் ச.பாலமுருகன், த.ம.பிரகாஷ், சுதாகர், குணவழகன், கிராமநிர்வாக அலுவலர் ராஜேஷ், ஆகியோர் எறும்பூர் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது எறும்பூர் பிள்ளையார் கோவில் அருகில் இருந்த 10ம் நூற்றாண்டை சேர்ந்த 3 கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தனர்.

அதில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த ராஜராஜசோழனின் கல்வெட்டை கண்டுபிடித்தனர், அதில் அந்த ஊரின் பெயர் வென்குன்ற கோட்டத்து எறும்பூர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நக்கன் மாதானியன் என்பவர் 45 ஆடுகள் தானமாக தரப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு கல்வெட்டு 15ம் நூற்றாண்டை சேர்ந்தது. அதில் அந்த ஊரில் உள்ள சிவனாலயத்தின் பெயர் பிரமீசுரஉடையார் என்றும், அம்மனின் பெயர் காமகோட்டமுடைய பெரிய நாச்சியார் என்றும் இருந்தது.

மேலும் 3வதாக மற்றொரு கல்வெட்டில் அதில் அப்பகுதியில் உள்ள பெருமாள் ஆலயத்திற்கு தானமாக தரப்பட்டது குறித்து கூறப்பட்டிருந்தது அதிகளவில் சேதமானதால் மேற்கொண்டு சரியான தகவல்கள் அதிலிருந்து எடுக்க முடியவில்லை என தெரிவித்தனர். இவ்வூர் ஆயிரமாண்டுக்கு முன்பிருந்தே எறும்பூர் என்ற பெயரிலேயே உள்ளது தெரியவந்துள்ளது. ராஜராஜசோழன் முதல் நாயக்கர் காலம் வரையிலான கல்வெட்டுகள் இவ்வூரில் காணப்பட்டது. இது வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். இந்த ஊரில் பல ஆலயங்கள் உள்ளன. அதிலிருந்த கல்வெட்டுகள் ஆலய புனரமைப்பின் போது பெருமளவில் சேதமடைந்துள்ளதால் பல தகவல்களை அறிய முடியாமல் உள்ளதாக கூறினர்.