தற்போதைய செய்திகள்

வன்னியர் சொத்துக்களை அபகரித்ததாக அபாண்டமாக பழி சுமத்துவதா? மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

விழுப்புரம்:-

ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் பா.ம.க இளைஞரணி தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் கழக வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை ஆதரித்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். உடன் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் முன்னிலை வகித்தார்.

இந்த வாக்குசேகரிப்பின் போது கழக அமைப்பு செயலாளர் டாக்டர். இரா.லட்சுமணன் எம்.பி, ஒன்றிய செயலாளர்கள் சேகரன், விநாயகமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சேர்மன் அண்ணாதுரை, கூட்டுறவு சங்க தலைவர் புலியனூர் விஜயன்,கூட்டணி கட்சி நிர்வாகிகளான வெங்கடேசன், சிவக்குமார், நெடி சுப்பிரமணியன், ராஜேந்திரன், அருள் , கழக நிர்வாகிகள் பட்டி பாலகிருஷ்ணன், ரங்கநாதன், பாலமுருகன், மனோகரன், பன்னீர்செல்வம், ஜெயபாலன், உதயகுமார், செந்தமிழ் செல்வன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் பேசுகையில், வன்னியர் சொத்துக்களை எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அபகரித்ததாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மேடைதோறும் பேசி வருகின்றார். அதனை அவர் நிரூபித்தால் அவர் என்ன சொன்னாலும் நாங்கள் செய்ய தயார். ஆனால் அதனை அவர் நிரூபிக்க தவறினால் தி.மு.க. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் தயாரா? தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்களே தி.மு.க.வில் பயனடைந்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலை பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற கூட்டணி கட்சி நிர்வாகிகள் கடுமையான உழைக்க வேண்டும் என்றார்.