தற்போதைய செய்திகள்

வன்முறையை திறமையாக கட்டவிழ்த்து விடும் ஒரே கட்சி தி.மு.க. தான் – துணை முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு…

விருதுநகர்:-

வன்முறையை திறமையாக கட்டவிழ்த்து விடும் ஒரே கட்சி தி.மு.க. தான் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று ராஜபாளையம் நகர் பகுதியில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கே.கிருஷ்ணசாமியை ஆதரித்து வாக்கு சேகரித்த போது ஆற்றிய உரை வருமாறு:-

தென்காசி நாடாளுமன்றத் தொகுதி புதிய தமிழகம் வேட்பாளர் கே.கிருஷ்ணசாமி நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து சேர்த்து, இத்தொகுதியில் மத்திய-மாநில அரசின் பல்நோக்கு திட்டங்கள், மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்து சேர்த்து, நல்ல முறையில் செயல்படும் குறிக்கோள் கொண்ட நல்ல வேட்பாளரை கழக கூட்டணி சார்பாக நிற்க வைத்துள்ளோம். நல்ல பல திட்டங்களை இத்தொகுதிக்கு கொண்டு வந்து மேன்மேலும் இத்தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவார் என்பதை இந்த நல்ல நேரத்தில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மா அவர்கள் 2011-ல் தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றபோது மக்களுக்கு நல்லதொரு திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை, தொலைநோக்கு திட்டம் என்றால் நம் எதிர்கால சந்ததியினருக்கு 500 ஆண்டு காலம் பயன்தரக்கூடிய வகையில் உள்ள திட்டங்களை அம்மா அவர்கள் பார்த்து, பார்த்து ஒவ்வொரு திட்டங்களையும் மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், இதை வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் நிறைவாக செய்யவேண்டுமென்று என்று எண்ணிதான், 20 கிலோ அரிசியை மாதந்தோறும் விலையில்லா அரிசியாக வழங்கினார்கள், தொலைநோக்குத் திட்டமாக 2023ல், ரூ.15 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு துறைகள் மூலமாக அரிய பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்கள்.

அத்திட்டத்தின் மூலமாக நாட்டு மக்களின் பொருளாதார நிலை உயர்வதற்கும், வாழ்வில் அடித்தளத்தில் உள்ள மக்கள் மேல்தட்டில் உள்ள மக்களுக்கு இணையாக, தன்னுடைய வாழ்க்கை நடைமுறையினை சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணிதான் அம்மா அவர்கள் தொலைநோக்கு திட்டத்தை கொண்டு வந்தார்கள், தமிழகத்தில் ஏழை, எளிய குடிசையில் வாழும் மக்களுக்கு தரமான, உறுதியான கான்கிரீட் வீடுகளை கட்டித் தரும் நோக்கத்தோடு, தமிழகத்தில் உள்ள 16 லட்சம் குடிசை வீடுகளுக்கு பதிலாக அன்றிலிருந்து இன்று வரை கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆக 2021க்குள் தமிழகத்தை குடிசை பகுதிகளற்ற கிராமங்களாக, குடிசைப் பகுதிகளற்ற பேரூராட்சிகளாக, குடிசை பகுதிகளற்ற நகராட்சிகளாக குடிசை பகுதிகளற்ற மாநகராட்சிகளாக உறுதியாக உருவாகும் என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

அம்மா அவர்கள் ஆட்சியில் பெண் குழந்தை பிறந்தால் வங்கியிலே காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு, அத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தை வளர்ந்தவுடன் 18 வயது அடைந்த பிறகு வட்டியுடன் சேர்த்து வழங்கக்கூடிய காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்த பெண் வளர்ந்து திருமண வயதை எட்டுகின்ற போது வறுமையில் உள்ள அந்த பெண்ணின் திருமணம் தடைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, திருமண நிதி உதவியாக ரூ.25,000/- ஐயும், பட்டதாரி பெண்ணாக இருந்தால் ரூ.50,000 ஆகவும்,
தாலிக்கு தங்கம் 4 கிராம் சேர்த்து வழங்கினார்கள். மீண்டும் தமிழகத்தில் 2016-ம் ஆண்டில் அம்மாஅவர்களின் ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தினை 8 கிராமாக உயர்த்தி, அம்மா அவர்களின் ஆட்சியில், முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் தலைமையில் நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

பேறுகால நிதிஉதவி ரூ.12,00 இருந்தது. 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ரூ.18,000/- மாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார் இன்று நாங்கள் வழங்கி கொண்டிருக்கிறோம். மாணவ செல்வங்களுக்காக அதிக நிதியை கல்விக்காக, கல்வி துறைக்கு ஒதுக்கி 16 வகையான கல்வி உபகரணங்கள், மாணவ செல்வங்களுக்கு இலவச பாடப்புத்தகம், இலவச லேப்டாப், இலவச பஸ்பாஸ், இலவச சைக்கிள் வழங்கினார்கள். இத்தகைய உன்னதமான திட்டங்களை மக்களுக்கு வழங்கியவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

பெண்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, மீண்டும் வீட்டில் பிள்ளைகளை பராமரிப்பது போன்று ஓய்வில்லாமல் உழைக்கும் பெண்களுக்கு, அதுவும் தமிழகத்தில் நிறைய தாய்மார்கள் நிறைய உள்ளனர் என்பதால் அம்மா அரசின் சார்பாக, பெண்களின் சுமையை குறைப்பதற்காக 5 ஆண்டுகாலமாக விலையில்லா அரிசி வழங்கி குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கினார்கள்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாடு மக்கள் சிறப்பாக பொங்கல் விழா கொண்டாட வேண்டும் என்று பொங்கல் பரிசு வழங்கினார்கள். தற்போது பொங்கல் பரிசுடன் ரூ.1,000 சேர்த்து இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு வழங்குகிறது.

விவசாயிகள் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அம்மா அவர்களின் ஆட்சியில் நாங்கள் இப்போது கூட ஏழை கூலி தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ரூ2,000 வழங்கி கொண்டிருந்தோம். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக கட்சிக்காரர்கள் உயர்நீதிமன்றத்தின் மூலம் தடை பெற்றார்கள். இத்தடையினை நீதிமன்றத்தின் மூலம் நீக்கி, மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஆணித்தரமாக வழங்குவோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக ஆட்சி நாடாளுமன்ற தேர்தலுடன் இருக்காது, இத்தோடு முடிந்துவிடும், அதிமுக இயக்கம் தலைதூக்காது என்று நினைத்திருந்தார்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1972-ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்டு அம்மா அவர்களால் பாதுகாக்கப்பட்டு ஒன்றரை கோடி தொண்டர்கள் ஆலம் விழுதுகளாக ஊன்றி ஆல மரமாக எந்த சுனாமி வந்தாலும் அசையாது, புயல் வந்தாலும் அசையாது, பூகம்பம் வந்தாலும் அசையாது, எந்த கொப்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அவர்களின் கட்டுப்பாட்டில் வளர்ந்த நாங்கள் மக்களுக்கு தொண்டு செய்வதே மகத்தானது, மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று உயரிய குறிக்கோளுடன் வாழ்ந்த மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் இந்த இயக்கத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டு மனசாட்சியோடு ஆட்சி செய்து வருகிறோம். நல்லபல திட்டங்களை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டினை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தீ வைத்து கொளுத்தியதாக பொய் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் திமுக ஆட்சியில் தான் நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, மாமன் மச்சான் சண்டையில் மதுரையில் தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தினை எரித்து தீவைத்து கொளுத்தி மூன்று நபர்களை உயிரிழந்தார்கள், அக்குற்றத்திற்காக நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்று அனுபவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த போது, தமிழகமே இருளில் மூழ்கியிருந்தது, அனைத்து மாவட்டங்களிலும் மின்சார தட்டுப்பாடு தலைவிரித்தாடியது.

ஐந்து ஆண்டுகளாக மின்சாரம் தட்டுப்பாட்டை தீர்க்கவே முடியவில்லை, அப்போது திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி, அப்போதே 2010-ம் ஆண்டு கடைசியில் திமுக ஆட்சி மீண்டும் வரவில்லையென்றால் அதற்கு மின்சார தட்டுப்பாடே தான் ஒரே காரணமாக இருக்கும் என்று அன்றே கணித்துள்ளார். அதன் பிறகு அவர்களால் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. பாவம் அவருக்கு, அன்றே அது தெரிந்துள்ளது.

அம்மா அவர்கள் 2011-ல் தமிழக முதலமைச்சராக ஆட்சியேற்றவுடன் மின்சாரம் தட்டுப்பாட்டை நீக்க தமிழகத்தை மின்சாரம் மிகுதியாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்சார மிகை மாநிலமாக மாற்றி இருளில் மூழ்கியிருந்த தமிழகத்தை மீட்டெடுத்தார்கள் என்பதனை இந்த நல்ல நேரத்தில் உங்களுக்கு நினைவுப்படுத்த நான் கடமைப் பட்டுள்ளேன்.

அம்மா அவர்கள் இப்படிப்பட்ட அராஜக ஆட்சியை ஒழிப்பதற்காக 2010-ம் ஆண்டு கோவையில் முதல் பொதுக் கூட்டத்திற்கு மக்கள் அலைகடலென திரண்டார்கள், அதற்கு பிறகு திருச்சி பொதுக் கூட்டம் நடத்தியபோது சுனாமி போல் மக்கள் வெள்ளம் பெருத்திருந்தது, இறுதியாக மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தினார்கள் அத்தோடு அவர்கள் ஆட்சி ஒழிந்தது, அதற்கு பிறகு நடந்த எந்த உள்ளாட்சி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலிலோ அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் யாரோ ஒருவர் பேச்சை கேட்டுக் கொண்டு கலர்-கலராக மஞ்சள், பச்சை, சிவப்பு என சட்டை அணிந்து கொண்டு, நமக்கு நாமே திட்டம் என சொல்லிக்கொண்டு எப்படியாவது முதலமைச்சராகிவிடலாம் என கனவு கண்டு கொண்டு சைக்கிளில் வருகிறார், டிராக்டரில் வருகிறார், கரும்புத் தோட்டத்தில் பூந்து வருகிறார், ஆட்டோவில் வருகிறார், டீக்கடையில் டீ குடிக்கிறார், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டு, பொய் பிரச்சாரத்தை பரப்பிக் கொண்டு வித்தை காட்டி வருகிறார், இந்த வித்தை நம்மிடம் பலிக்காது, மக்கள் யாரும் ஏமாறமாட்டார்கள்.

தி.மு.க-காரர்கள் பிரியாணி கடையில் வாங்கி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்க வேண்டாமா? காசு கேட்டால் வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, பல்வேறு குற்றசாட்டுகளுடன், காட்டு-தர்பார் ஆட்சி செய்த திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான்,
வன்முறை கட்டவிழ்த்து விடுவதில் திறமையான ஒரே கட்சி திமுக தான். மேலிருந்து அம்மா அவர்கள் எங்களை எப்படி ஆட்சி செய்கிறோம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், நடக்கும் எங்கள் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத் தந்தோம். அப்போது நான் முதலமைச்சராக இருந்த போது பாரத பிரதமர் நரேந்திரமோடியிடம் முறையிட்டு அது சம்பந்தமாக பிரதமர் 5 துறைகளிடம் ஒரே நாளில் ஆலோசனை செய்து தடையின்மை சான்று மற்றும் அனுமதி பெற்று தந்த, பிரதமர் நரேந்திரமோடி தான் என்பதை தங்களுக்கு நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.

மதுரையில் 1500 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம், மத்திய அரசு நிதி உதவி பெற்று தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மத்திய – மாநில அரசுகள் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து கொண்டு நல்லாட்சி செய்து வருகின்றோம்.இதையெல்லாம் கருத்தில் கொண்டு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று தென்காசி நாடாளுமன்ற தொகுதி மக்களாகிய நீங்கள் எடைபோட்டு பார்க்கும் எஜமானர்களாக செயல்பட்டு

தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தென்காசி நாடாளுமன்ற தொகுதிதான் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் புதிய தமிழகம் வேட்பாளர் கே. கிருஷ்ணசாமியை இட்டை இலை சின்னத்தில் முத்திரையிட்டு வெற்றி பெற செய்து வரலாற்று சாதனையை நிகழ்த்துமாறு உங்களது பொற்பாதம் வணங்கி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நாளும் நமதே, நாற்பதும் நமதே

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.