தற்போதைய செய்திகள்

வரும் அனைத்து தேர்தல்களிலும் கழகமே அமோக வெற்றி பெறும் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேச்சு…

திண்டுக்கல்:-

வரும் அனைத்து தேர்தல்களிலும் கழகமே அமோக வெற்றி பெறும். தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் நீடித்த புகழுக்கு காரணம் அகிலம் வியந்த அஞ்சாமையா, அதிசயம் படைத்த ஆளுமையா என்ற தலைப்பில் மாபெரும் பட்டிமன்றம் நடைபெற்றது.

ஒன்றிய கழக செயலாளர் யாகப்பன் தலைமை வகித்தார். அம்மையநாயக்கனூர் பேரூர் கழக செயலாளர் தண்டபாணி வரவேற்றார். வத்தலகுண்டு ஒன்றிய கழக செயலாளர் எம்.வி.எம்.பாண்டியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட கழகப் பொருளாளரும், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.உதயகுமார், மாவட்ட கழக செயலாளரும், மாநகராட்சி முதல் மேயருமான வி.மருதராஜ், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் ரா.விஸ்வநாதன் ஆகியோர் பேசினர். கழக அமைப்புச் செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.

கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் டாக்டர் வைகைச் செல்வன் நடுவராக இருந்து நடத்திய இந்த பட்டிமன்றத்தில் அகிலம் வியந்த அஞ்சாமை என்ற தலைப்பில் நெத்தியடி நாயகன், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் ஆகியோரும், அதிசயம் படைத்த ஆளுமையா என்ற தலைப்பில் கோபி காளிதாஸ், வடுகபட்டி சுந்தரபாண்டியன் ஆகியோரும் பேசினர்.

நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று கிராமசபை கூட்டம் நடத்துகிறார். கூட்டம் நடத்துவது பெரிதல்ல. மக்கள் அன்பை பெறுவது தான் முக்கியம். வீரியம் பெரிதா? காரியம் பெரிதா? என்றால் காரியம் தான் பெரியது. கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொங்கல் பரிசாக ரூ 1000 வழங்கினர். இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக மருமகன் சபரீசன் பேச்சை கேட்டு ஸ்டாலின் கிராமசபை கூட்டம் நடத்துகிறார்.

அக்கூட்டத்தில் மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் என்கிறார்கள். இது முதல் பொய். இரண்டாவதாக ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததற்கு கழக அரசு தான் காரணம் என பொய் சொல்கிறார். உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடாது என நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியது திமுகவினர் தான். இரண்டரை வருடங்களாக தேர்தலை நிறுத்திவிட்டு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதி நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் 12624 கிராம ஊராட்சிகள் உள்ளன. 80,000 குக்கிராமங்கள் உள்ளன. 234 தொகுதிகளிலும் அனைத்து பணிகளும் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ தங்கதுரை தினகரன் பின்னால் சென்றதால் எம்.எல்.ஏ. பதவி போனதுதான் மிச்சம். இன்று தெருவில் நிற்கிறார். வரக்கூடிய இடைத்தேர்தலில் நிலக்கோட்டை தொகுதி என்றும் அம்மாவின் கோட்டை என்பதை நிரூபிப்பார்கள். துரோகம் செய்தவர்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை. லோக் ஆயுக்தா சட்டம் அதிகாரத்தில் உள்ளவர்களை விசாரணை செய்வதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றம். இதற்கான நீதிபதியை தேர்வு செய்ய எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஸ்டாலினை அழைத்தபோது அவர் ஏன் வரவில்லை. கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என ஸ்டாலின் கூறினார்.

இதன்பின்னர் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல்காந்தியை பற்றி பேசவே இல்லை. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இனி கட்சியில் துரோகிகளுக்கு இடம் கிடையாது என்று கழக ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையின் கீழ் உள்ளவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும். தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என துணை ஜனாதிபதி கையால் விருது வழங்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கல்வித்துறைக்காக ரூ.28 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு அம்மா கூட்டியபோது 2 லட்சம் கோடி முதலீடு கிடைத்தது. தற்போது கழக ஆட்சியில் 3 லட்சத்து 44 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. திமுக ஆட்சியில் இல்லாத புதுமைகளை கழக ஆட்சி செய்து வருகிறது. ஸ்டாலின் ஆசிரியர் போராட்டத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தார்.

ஆனால் கழக அரசு ராஜதந்திர நடவடிக்கை எடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. நிதி நிலைமையை அவர்களுக்கு எடுத்துக் கூறினால் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் ஸ்டாலினுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றுவதற்காக கிராமம் கிராமமாக ஸ்டாலின் சென்று வருகிறார். வருகிற தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கழகமே வெற்றி பெறும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பேரூர் கழக செயலாளர் சேகர், வத்தலகுண்டு பேரூர் கழக செயலாளர் பீர்முகமது, முன்னாள் சேர்மன் திவான் பாட்ஷா, பேரவை செயலாளர் விஜயராஜன், முன்னாள் அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதி முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான் நன்றி கூறினார்.