தற்போதைய செய்திகள்

வரும் அனைத்து தேர்தல்களிலும் கழகமே அமோக வெற்றி பெறும் – கழக அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம் பேச்சு…

காஞ்சிபுரம்:-

வரும் அனைத்து தேர்தல்களிலும் கழகமே அமோக வெற்றி பெறும் என்று கழக அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம் கூறினார்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் அச்சரப்பாக்கம் பஜார் பகுதியில் புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பெரும்பாக்கம் சி.விவேகானந்தன், முன்னாள் துணை சேர்மன் சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் வி சோமசுந்தரம் பேசியதாவது:-

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்குப் பின்னரும் இந்த இயக்கமும் ஆட்சியும் நூறு ஆண்டுகள் இருக்கும் என்று சொன்ன அந்த வாக்கினை நிறைவேற்றுகின்ற வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் யாரை அடையாளம் காட்டுகிறார்களோ அவர்களை அதிகப்படியான வாக்குகளை பெற்று வெற்றி பெறச் செய்து காஞ்சிபுரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாவின் பிறந்தநாள் விழாவில் சபதம் ஏற்க வேண்டும்.

புரட்சித்தலைவர் உருவாக்கிய இந்த இயக்கம் பல்வேறு இன்னல்களுக்கு இடையே இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுத்து கழகத்தை காத்த பெருமை புரட்சித்தலைவி அம்மாவை சாரும். புரட்சித்தலைவி அம்மாவின் சாதனைகள் எண்ணிலடங்கா, திமுக ஆட்சிக் கட்டிலிலே இருந்தபோது தமிழகத்தில் பல மணி நேரம் மின் வெட்டு இருந்தது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சொன்னார்.

கழக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்று, அதை நிரூபிக்கின்ற வகையிலே 2011-ல் ஆட்சிக்கு வந்தவுடன் எந்தெந்த வகையில் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று அதிகாரிகள் இடத்திலே ஆலோசனை செய்து , அதற்கான நடவடிக்கைகளை எடுத்து இன்றைக்கு தமிழகத்தை மின்மிகை மாநிலமாக அம்மா மாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மிகையாக உள்ள மின்சாரத்தை அண்டை மாநிலத்திற்கு கொடுக்கின்ற அளவிற்கு திட்டங்களை வகுத்தவர் அம்மா. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் அதிக அளவில் பயன் பெறுகின்ற வகையில் மேல்நிலை படிப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு மடிகணினி அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் அம்மா.

இன்றைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. அவருக்கு விடிந்ததும் முதல்வர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான். அவருடைய எண்ணம் என்றும் ஈடேறாது. திமுக ஒரு குடும்ப ஆட்சி. கழகம் மக்களாட்சி இனி வரும் அனைத்து காலங்களிலும் கழகம் தான் வெற்றி பெறும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம் பேசினார்.