தற்போதைய செய்திகள்

வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் ஸ்டாலின் காணாமல் போய் விடுவார் – வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி

மதுரை

வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் ஸ்டாலின் காணாமல் போய் விடுவார் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி கழக செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழகத்தில் காலியிடம் இருந்து வந்த நிலையில் அந்த இடத்தை முதலமைச்சர் நிரப்பி உள்ளார். இன்றைக்கு 124 சட்டமன்ற உறுப்பினர் கொண்ட மாபெரும் இயக்கமாக நமது இயக்கம் உள்ளது. அதுமட்டுமல்லாது மக்களின் நம்பிக்கை பெற்ற இயக்கமாக நம் இயக்கம் உள்ளது. இந்த அரசு ஒருநாள் தாங்காது என்று சொன்னவர்கள் மத்தியில் நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம்தான் நிலைத்து நிற்கும் என்ற வரலாற்றை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். அனைத்து ஊராட்சிகளிலும் தகுதி வாய்ந்தவர்களுக்கு முதியோர் உதவித்தொகை உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முதலமைச்சர் கூடுதலாக 5 லட்சம் பேருக்கு வழங்க ஆணையிட்டுள்ளார்.

நடிகர் கமலஹாசன் இலவசம் கொடுக்கக்கூடாது என்று கூறுகிறார். இலவசம் கொடுக்கக் கூடாது என்றால் அடித்தட்டு மக்கள் எங்கே போவார்கள். பொருளாதாரத்திலும், கல்வியிலும் சமூக சிந்தனை முன்னேறிய பிறகுதான் இலவசங்களை நிறுத்த முடியும். சாதாரண விவசாயிகள் எவ்வாறு முன்னேற முடியும் .இலவசங்களை கொடுப்பதால் தான் பொங்கல் தீபாவளி கொண்டாட முடிகிறது. கழகம் ஆட்சிக்கு வந்த பின் பட்டினிச்சாவு எங்காவது நடந்தது உண்டா?

திருப்பதி கோயிலில் தான் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்குவார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு புதிய சகாப்தம் படைக்கும் வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கியுள்ளார். இப்படி தினந்தோறும் ஏதாவது ஒரு சாதனையை முதலமைச்சர் செய்து வருகிறார்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. இன்று முதல் நீங்கள் தேர்தல் களப்பணியை தொடங்க வேண்டும். ஸ்டாலின் மீது மக்கள் கோபமாக உள்ளனர். ஏன்என்றால் தினந்தோறும் ஏதாவது பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார். இந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றி பெறுவோம். இதன் மூலம் ஸ்டாலின் காணாமல் போய்விடுவார்.

இவ்வாறு புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட மன்ற செயலாளர் ஓம்.கே.சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பூமி பாலகன் மற்றும் 32 ஊராட்சி கிளை செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.