திருப்பூர்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையாக பாடுபடுவோம் – திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கு எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள்…

திருப்பூர்:-

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையாக பாடுபடுவோம் என்று திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி ஆகிய 4 தொகுதிகளில் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றுவது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ.,கே.என்.விஜயகுமார், பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-

கொங்கு மண்டலத்தில் எப்போதுமே அண்ணா தி.மு.க வெற்றி பெற்று வருகிறது. இந்த பகுதி கழகத்தின் கோட்டை ஆகும். அந்த வெற்றியை நாம் தொடர்ந்து பெற வேண்டும். இதற்காக பூத் கமிட்டிகளை எப்படி அமைக்க வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை வழங்கி இருக்கிறார். அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் பல பகுதிகளில் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை நாம் சந்தித்த தேர்தல்களில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமக்கு எல்லாமுமாக இருந்து ஆலோசனைகளை வழங்கினார். இனி வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் அம்மா அவர்கள் இல்லாமல் நாம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும்.

நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள், அவைத்தலைவர் எல்லாம் கூறியது போல நம்மிடையே எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் மறந்து ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றியை குவிக்க பாடுபட வேண்டும். இதற்காக தொகுதி வாரியாக, ஒன்றியங்கள் வாரியாக, பகுதி கழகங்கள் வாரியாக பூத் கமிட்டிகளை அமைத்து சிறப்பாக செயல்பட வேண்டும். பூத் கமிட்டியில் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளை சேர்த்து கமிட்டி அமைக்க வேண்டும். ஒவ்வொரு கமிட்டிக்கும் ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமித்து முழுமையாக பாடுபட வேண்டும்.

கூட்டணி எப்படி அமையும் என்பதை தலைமைக் கழகம் பார்த்துக் கொள்ளும். எப்படி அமைந்தாலும் கழக வேட்பாளர்களை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். எதிர் க்கட்சிகள் கூட்டணி வைத்திருக்கிறார்கள். அதை முறியடிக்கும் வண்ணம் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். அம்மா அவர்களின் திட்டங்களை முன்னிலைப்படுத்தி வாக்குகள் சேகரிக்க வேண்டும். வெற்றியடைய நாம் கடுமையாக பாடுபட வேண்டும். கழக தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் சரி, யாருடன் கூட்டணி வைத்தாலும் சரி நாம் மிகச்சிறப்பாக செயல்பட்டு திருப்பூர் மாநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கழக இணை செயலாளர் வி.எம்.சண்முகம், சார்பு அணி செயலாளர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், திருப்பதி, கே.என்.சுப்பிரமணியம், டாக்டர் சீனியம்மாள், பி.கே.முத்து, ஒன்றிய கழக செயலாளர்கள் சேவூர் வேலுசாமி, அவிநாசி மு.சுப்பிரமணியம், பல்லடம் பரமசிவம், பொங்கலூர் சிவாச்சலம், கழக நிர்வாகிகள் டெக்ஸ்வெல் முத்துசாமி, ராமசாமி, பகுதி கழக செயலாளர்கள் கருணாகரன், கருவம்பாளையம் மணி, ஏ.எஸ்.கண்ணன், பட்டுலிங்கம், தண்ணீர் பந்தல் நடராஜ், சண்முகசுந்தரம், தெய்வசிகாமணி, அன்னூர் சவுகத் அலி, புத்தரச்சல் பாபு, சித்துராஜ், பூண்டி பழனிசாமி, எம்.கே.எம்.கணேஷ், நீதிராஜன், ஷாஜகான், பரமராஜன், ரத்தினகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.