தற்போதைய செய்திகள்

வளர்ச்சி பாதையில் இந்தியா பீடுநடை போட மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் – ஜி.கே.வாசன் பிரச்சாரம்…

தருமபுரி

இந்தியா வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் என்று மொரப்பூரில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியின் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து கழக கூட்டணி கட்சிகள் சார்பில் மொரப்பூரில் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- 

நாமெல்லாம் இந்தியர்கள் நமது இந்தியா வலிமையான இந்தியாவாக இருந்தால் மட்டும் போதாது. பாதுகாப்பான இந்தியாவாக இருக்க வேண்டும். அதற்கு உத்தரவாதம் கொடுக்கின்ற ஆட்சி மத்தியில் பா.ஜ.க ஆட்சி ஆகும். தொடர்ந்து மத்தியில் பா.ஜ.க அரசு இருக்க வேண்டும் எனில் தமிழகத்தில் ஒத்த கருத்து உடைய அரசு இருக்க வேண்டும்.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம் பெற்று உள்ளன. இந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்லவும், வலிமையும் பாதுகாப்பும் கொண்ட வல்லரசு நாடாக மாற மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி மீண்டும் மத்தியில் அமைய வேண்டும். பெண்கள் வாக்குகளை நூறு சதவீதம் அ.தி.மு.க கூட்டணிக்கு அளிக்க வேண்டும்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொடுக்க முடியாத மக்களுக்கான திட்டங்கள் அனைத்தும் தமிழக அரசு கொடுத்து வருகிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணி சந்தர்பவாதக் கூட்டணி. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை அனைத்தும் மக்கள் ஏற்ககூடிய வகையில் உள்ளது. பா.ஜ.க ஆட்சி மீண்டும் மத்தியில் அமைய வேண்டும் என்றால் நீங்கள் மாம்பழத்திற்கும் இரட்டைஇலைக்கும் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.