தற்போதைய செய்திகள்

வழக்கை சந்திக்கவே நேரமில்லாத கார்த்தி சிதம்பரம் மக்களை எப்படி சந்திப்பார் – பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ஜி.பாஸ்கரன் பிரச்சாரம்….

சிவகங்கை

அவர் மீதுள்ள வழக்குகளை சந்திக்கவே நேரமில்லாத சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் மக்களை எப்படி சந்திப்பார் என்று பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ஜி.பாஸ்கரன் பிரச்சாரம் செய்து பேசினார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியின் பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து அமைச்சர் ஜி.பாஸ்கரன் சிவகங்கை ஒன்றிய சுற்றுப்பகுதியில் மக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார்.

அப்போது அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 7 முறை எம்.பியாகவும், மத்திய நிதியமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர்கள் என பல முக்கிய பொறுப்பு வசித்த போதும் சிதம்பரம் நமது மாவட்டத்தை கண்டுகொள்ளவே இல்லை. இப்பொழுதும் நமது மாவட்டம் வறட்சி மாவட்டமாகும். மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருப்பதற்கு அவர் தான் ஒரு முக்கிய காரணமும் ஆகும். இப்பொழுது அவர் தன் மகனை வேட்பாளராக நிறுத்தி உள்ளார் அவரே ஒன்றும் செய்யாத பொழுது அவருடைய மகன் இந்த தொகுதிக்கும் இந்த மக்களுக்கும் என்ன செய்யப் போகிறார்.

அவர்களுடைய வழக்கிற்காக நீதிமன்றம் செல்வதற்கே நேரம் இருப்பதில்லை. இப்பொழுது முன்ஜாமீன் வாங்கி தான் தேர்தலை சந்திக்கும் நிலையில், அவர்கள் எப்படி மக்களை பற்றி சந்திப்பார்கள். தேர்தல் வரும் போது மக்களை பார்க்க வரும் இவர்கள், அதன் பிறகு அவர்களை பார்ப்பது அரிய வாய்ப்பாகவே இந்த பொதுமக்களுக்கு இருக்கின்றது.

ஆனால் நமது வேட்பாளர் எச். ராஜா ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். படித்த பண்பாடு மிக்க ஒரு நல்ல மனிதர். மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்தால் எச்.ராஜாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதன் பயனாக நமது மாவட்டம் பல சிறப்புகளை பெற இவர் பாடுபடுவார் என நான் உறுதி அளிக்கிறேன். இந்தியா பாதுகாப்பாக இருந்திட தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்றிட உங்களுடைய பொன்னான வாக்குகளை தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசினார்.