சிறப்பு செய்திகள்

வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க தி.மு.க. திட்டம் – உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் அதிகாரியிடம் கழகம் புகார்…

108 அவசர ஊர்தி என்ற போலி வாகனங்களில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் பரிசு பொருட்களை கடத்தப்படுகிறது. தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயம் பின்புறமுள்ள கல்யாண மண்டபத்தில் கத்தை கத்தையாக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க தி.மு.க. ரகசிய திட்டம் திட்டமிட்டுள்ளது. இவற்றை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரியிடம் கழகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை:-

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதற்காக கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பரிசு பொருட்கள் தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. பணத்தையும், பரிசு பொருட்களையும் தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு கொண்டு செல்ல 108 அவசர ஊர்தி என்ற போர்டுகளை மாட்டி அவற்றின் மூலம் பணத்தை கடத்தி சென்று வாக்காளர்களுக்கு இரவோடு இரவோடு விநியோகிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

இது குறித்து உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் கழகம் புகார் கொடுத்துள்ளது. சமீபத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதும், அதைத்தொடர்ந்து அவரது நண்பர் மற்றும் உதவியாளர்வீடு மற்றும் அலுவலகங்களில் ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டதும் தெரிந்ததே. கோடிக்கணக்கில் இவ்வளவு பணம் எப்படி வந்தது. எதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள். அதற்குரிய விளக்கங்களை துரைமுருகன் மற்றும் அவரது மகனிடம் கேட்டுப் பெற உள்ளனர்.

இந்த பணம் தேர்தல் செலவுகளுக்காகவும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காகவும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதுமட்டுமல்ல இன்னும் 100 கோடி ரூபாய் அளவுக்கு தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றி தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். துரைமுருகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தங்கள் தவறை மறைக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு அரசியல் சாயம் பூச முயற்சித்து வருகிறார். ஆனால் துரைமுருகன் தொகுதியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக கோடிக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்ய தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கை தொகுதியில் மட்டும் 200 கோடிக்கு மேல் பணம் விநியோகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

தி.மு.க. சார்பில் இரு சக்கர வாகனங்களில் இரவோடு இரவாக கிராமப்புறங்களுக்கு கத்தை, கத்தையாக பணம் அனுப்பப்பட்டு வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. கிராமப்பகுதிகளில் பணம் விநியோகம் செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது. ஒரு கிராமத்தில் உள்ள தி.மு.க. கிளை செயலாளர் மூலம் வாக்காளர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு எந்த வீட்டில் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு தலா இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கூறி பணம் விநியோகம் நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களிலும் பணம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே இவற்றை எல்லாம் தேர்தல் ஆணையம் விழிப்போடு செயல்பட்டு அதை தடுத்திட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் மற்றும்கழக வழக்கறிஞர்கள் சி.திருமாறன், ஆர்.வி.பாபு, பி.மோகனரங்கன், எம்.தமிழரசன், ஜெ.புருசோத்தமன், என்.பசுபதி ஆகியோர்  தனித்தனியாக 6 புகார் மனுக்களை கொடுத்தனர். அவற்றின் விபரம் வருமாறு:-

முதல் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தற்பொழுது நடைபெற உள்ள 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவும், வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்திடவும் வேண்டி தி.மு.க. தலைமையும், அதன் நிர்வாகிகளும் மற்றும் சன் தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து அவசர ஊர்தி எண் 108 என்று வாசகம் குறிக்கப்பட்ட தங்களுக்கு சொந்தமான வாகனங்களை தயார் செய்து தங்களது வேட்பாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கும் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்கும், மேற்படி அவசர ஊர்தி வாகனங்கள் என்ற போர்வையில் தயாரிக்கப்பட்ட தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பணம் கொண்டு செல்கிறார்கள்.

மேலும் அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு அந்தந்த மாவட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டதும், மாவட்ட மருத்துவமனைகளுடன் தொடர்புடைய 108 அவசர ஊர்திகளின் எண்களை சுற்றறிக்கையாக அனுப்பி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும், அந்தப் பட்டியலில் இல்லாத வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும், இதனால் தேவையற்ற உடல்நலன் பாதித்தவர்கள் பயணம் செய்யும் அவசர ஊர்திகளை சோதனை செய்து தேவையற்ற சிரமங்களை தவிர்க்கலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எனவே உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து மேற்படி அவசர ஊர்தி 108 என்ற போர்வையில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் சன் தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றிற்கு சொந்தமான வாகனங்களை பறிமுதல் செய்து தி.மு.க. தலைமை மற்றும் அதன் நிர்வாகிகள் மற்றும் சன் தொலைக்காட்சி நிர்வாகிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டி இந்த விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கின்றோம்.

2-வது புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நடைபெற உள்ள 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சென்னைக்குட்பட்ட மத்திய சென்னை, சென்னை தெற்கு, சென்னை வடக்கு நாடாளுமன்ற தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவான மேற்படி தொகுதி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்திட வேண்டி தி.மு.க. தலைமை அலுவலகமாக அறிவாலயத்தின் பின்புறம் அமைந்துள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் மிக அதிக அளவில் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பண விநியோகம் செய்வதற்கும் சட்ட விரோதமாக பணம் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றது.ஆகையால் இது குறித்து உரிய ஆய்வு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

3-வது புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நடைபெற உள்ள 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பரப்புரைகள் செய்வது குறித்து வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கடுமையான சுட்டெரிக்கும் வெயிலில் பொதுக்கூட்டங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2016-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் இதுபோன்ற தேர்தல் நேரத்தில் பகல் வேளையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்கு போதுமான தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். முதியோர்களுக்கு பந்தல் அமைத்து நிழல் வசதி செய்து தர வேண்டும். கூட்டம் முடிந்த உடன் முதியோர்கள் உடனடியாக வெளியேறும் வசதி செய்து தர வேண்டும். செவிலியருடன் தீயணைப்பு அவசர ஊர்தி பொதுக்கூட்டப் பகுதியில் நிறுத்தப்பட வேண்டும் என்று கட்டுப்பாட்டுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இந்த தேர்தல் விதிமுறைகளையும், உயர்நீதிமன்ற உத்தரவையும் காற்றில் பறக்க விட்டு அதனை மீறி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் தமிழகம் முழுவதும் நடத்தி வரும் பொதுக்கூட்டங்கள் அனைத்தும் கடுமையான சுட்டெரிக்கும் வெயிலில் திறந்தவெளி மைதானங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்திற்கு மக்கள் கலந்து கொள்வதற்கு பண விநியோகம் செய்து சட்ட விரோத முறையில் வாகனங்களில் அழைத்து வரப்படுகின்றனர். மக்களின் நலனில் அக்கறையின்றி மேற்படி பொதுக்கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகினது. ஆகையால் இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மு.க.ஸ்டாலினே பொறுப்பாவார்.

எனவே தேர்தல் விதிமுறைகளை மீறி மு.க.ஸ்டாலின் கடும் சுட்டெரிக்கும் வெயிலில் மக்களை வாட்டி வதைத்து செய்து வரும் பரப்புரை பொதுக்கூட்டங்கள் குறித்து தக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4-வது புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

1.4.2019 அன்று முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் இல்லம், அலுவலகம், கல்லூரி முதலிய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டதாக தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் செய்திகளை பார்த்தேன். அதன் அடிப்படையில் தொலைக்காட்சிகளில் பார்த்தபோது கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளாக காணப்படுகிறது.

இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட துரைமுருகனின் வழக்கமான நையாண்டியாய் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னாலும் வியப்பிற்கில்லை. எனவே கைப்பற்றப்பட்ட பணத்தின் வரிசை எண்ணை கொண்டு அறிவியல் பூர்வமாக அந்த ரூபாய் நோட்டுக்கள் எந்த வங்கியிலிருந்து யார் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கியின் கருவூலத்திலிருந்து எந்த வங்கி கணக்கிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் ஆணையர் இந்த புகார் மனுவை காவல்துறை தலைமை இயக்குநருக்கு சார்பு செய்து நுட்பமான விசாரணை செய்து இந்த பணம் பதுக்கலில் சம்பந்தப்பட்ட துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் தொடர்புள்ள அனைவரின் மீதும் தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5-வது புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் தயாநிதி மாறனுக்கு சொந்த நிறுவனம் சன் தொலைக்காட்சி நிறுவனமாகும். இதன் தலைமை அலுவலகம் பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் செய்தி மற்றும் இதர நிகழ்வுகள் குறித்து தகவல்கள் சேகரித்து வருவதற்கு சொந்தமாக பல்வேறு வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் நிகழ்ச்சிகளை பதிவு செய்து வெளியிடுவதற்கும் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கும் ஏதுவான வகையில் மிகவும் தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகளை உள்ளடக்கிய வாகனங்கள் ஆகும். மேலும் தற்பொழுது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து செய்தி மற்றும் தகவல்கள் சேகரித்து வழங்கிட மிக அதிக அளவில் இந்த வாகனங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

மேற்படி வாகனங்களை மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் தயாநிதி மாறனுக்கு தேர்தல் குறித்த செய்தி மற்றும் தகவல்கள் சேகரிப்பதற்காக பயன்படுத்துவது போன்ற ஒரு ேபார்வையில் மத்திய சென்னை தொகுதி மற்றும் தென் சென்னை தொகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பண விநியோகம் செய்வதற்காக எண்ணிலடங்கா கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான ரூபாய்கள் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படுகிறது.

எனவே உடனடியாக இந் நேர்வில் தலையிடடு தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் உயர் காவல் அதிகாரிகளுக்கு தக்க உத்தரவுகளை வழங்கி மேற்படி சன் டி.வி. நிறுவனம், அதன் வாகனங்கள் மற்றும் தி.மு.க. வேட்பாளர்தயாநிதி மாறன் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுத்திடவும், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

6-வது புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தினகரன் தரப்பிற்கு பரிசுப் பெட்டியை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. தினகரன், அவர் சார்ந்த வேட்பாளர்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக அட்டைப் பெட்டியில் செய்து அதன் உள் வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கையூட்டு வழங்கும் விதமாக பரிசுப் பொருட்களை வைத்து மாநிலம் முழுவதும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இது முழுமையான தேர்தல் விதி மீறலாக பார்க்கப்படுகின்றது.

எனவே இதுபோன்ற பரிசுப் பெட்டிகளை பரிசுப் பொருட்களோடு வழங்குவதை தடுக்கும் விதமாகவும், தேர்தல் நல்லமுறையில் நடைபெற வேண்டியதற்காகவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னத்தை அட்டையில் படமாக வரைந்து பயன்படுத்த உத்தரவிட வேண்டியது மிக அவசியமாகிறது.

எனவே மேற்கூறிய புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தினகரன் மற்றும் அவரின் வேட்பாளர்கள் பரிசுப் பொருட்களுடன் கூடிய பரிசுப் பெட்டியை பொருளாக பயன்படுத்துவதை தடுத்து அவர்களின் சின்னத்தை அட்டையில் வரைந்து பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு புகார் மனுக்களில் கூறப்பட்டுள்ளது.