தற்போதைய செய்திகள்

வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் – அமைச்சர் பி.தங்கமணி பெருமிதம்

நாமக்கல்

கடந்த 8 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் என்று அமைச்சர் பி.தங்கமணி பெருமிதத்துடன் கூறினார்.

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், பெருங்குறிச்சி ஊராட்சி, கருந்தேவம்பாளையத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டட திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி கலந்து கொண்டு நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

இந்த கால்நடை மருந்தகத்திற்கு சுற்றுசுவர் மற்றும் தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் சித்தம்பூண்டி சாலை பழுதடைந்து இருப்பதால் உடனடியாக புதிய தார்சாலை அமைக்கப்படவுள்ளது.
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமானது அரசாங்கமே மக்களை தேடிச் சென்று, மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று விரைந்து குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு வழங்கப்படக்கூடிய திட்டமாகும்.

பெறப்பட்ட மனுக்களில் அதிகப்படியாக முதியோர் உதவி தொகை வேண்டியும், வீட்டுமனை பட்டா வழங்ககோரியும் மனுக்கள் வந்துள்ளன. பெறப்படும் மனுக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். இன்னும் இருபது நாட்களில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்டங்களை சேலத்தில் முதலமைச்சர் வழங்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் ஆடுகள், கறவைமாடுகள் மற்றும் கோழிகள் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறுகின்ற வகையில் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தை பிரித்து, புதியதாக நாமக்கல் மாவட்ட பால்உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பால்உற்பத்தியாளர்கள் நாளொன்றுக்கு 1,50,000 முதல் 1,75,000 லிட்டர் பாலை வழங்கி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு 2 கலைக்கல்லூரி, 1 மருத்துவக்கல்லூரி, 1 சட்டக்கல்லூரி, 4 வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிலிக்கல்பாளையத்தில் பாலம் கட்ட 1 மாத காலத்திற்குள் டெண்டர் விடப்படும். சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழைநீரானது ஏரிகளில் சேகரிக்க வாய்ப்பாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெல்லம் தயாரிக்கும் பணிக்காக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வேண்டுமென்று விவசாய சங்கத்தினர் மனுவை அளித்துள்ளனர். நாளை மறுதினம் சென்னை சென்று அலுவலர்களுடன் ஆய்வு செய்து சட்டதிட்டங்களுக்கு உட்பட்டிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

முன்னதாக கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், பெருங்குறிச்சி ஊராட்சி, கருந்தேவம்பாளையத்தில் கால்நடை மருந்தக கட்டடம் கட்ட இடம் வழங்கிய எஸ்.சுரேசை பாராட்டி, அமைச்சர் பி.தங்கமணி சால்வை அணிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.ஆர்.ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பொன்னுவேல், உதவி இயக்குநர் அருண்பாலாஜி உள்பட அரசுத்துறை அலுவலர்கள், கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.