தற்போதைய செய்திகள்

வாக்குறுதியை நிறைவேற்றாத கட்சி தி.மு.க. – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு…

சென்னை:-

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத கட்சி திமுக என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் குறித்த பொது விவாதத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி கலந்து கொண்டுபேசும் போது விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பதிலளித்து பேசியதாவது:-

விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறையுடன் நடந்து கொள்வது அம்மாவின் அரசு மட்டும் தான். அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியவர் அம்மா தான். நீங்கள் உங்கள் தேர்தல் அறிக்கையில் ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தீர்கள். ஆட்சிக்கும் வந்தீர்கள். ஆனால் ரூ.7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தீர்களா? இல்லை. ரூ.5,318 கோடி மட்டுமே தள்ளுபடி செய்தீர்கள். நீங்கள் விட்டுச் சென்றவர்களுக்கும் நாங்கள் கடனை தள்ளுபடி செய்து சான்றிதழ் அளித்தோம். ஒட்டு மொத்தமாகக் கடன் தள்ளுபடி மூலம் சுமார் 10 லட்சம் விவசாயிகள் பலன் பெற்றனர்.

நாங்கள் தானே புயல், வறட்சி, வெள்ளம் போன்ற எல்லாவற்றுக்கும் பயிர் கடன் மற்றும் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்து இழப்பீடு தொகையை பெற்று தந்துள்ளோம். மேலும் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்றவர்களில் 80 சதவீதத்திற்கு மேல் கடனை அடைத்துள்ளனர். எனவே இவர்களின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது இல்லை. மத்திய வங்கியில் கடன் வாங்கியவர்கள் மட்டும்தான் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்கள் ரூ.7 ஆயிரம் கோடி அறிவித்தது உண்மை. ஆனால் கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் கடனை தள்ளுபடி செய்தோம் என்றார்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குறுக்கிட்டு பேசியதாவது:-

இதைத்தான்அமைச்சர் கூறுகிறார். நீங்கள் அறிவித்தபடி ரூ.7 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்யவில்லை என்பது தான் உண்மை. நாங்கள் வறட்சி ஏற்பட்டாலும் நிதி தருகிறோம். வெள்ளம் வந்தாலும் நிதி தருகிறோம். விவசாயிகளுக்கு எப்போதும் நிவாரண உதவிகளை தொடர்ந்து செய்கின்ற அரசு அம்மாவின் அரசு.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.