தமிழகம்

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் – இந்திய துணை தேர்தல் ஆணையர்கள் ஆய்வு

சென்னை:-

சென்னையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகளை இந்திய துணை தேர்தல் ஆணையர்கள் ஆய்வு செய்தனர்.

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் மற்றும் பாண்டிச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் முதுநிலை துணைத் தேர்தல் ஆணையர்கள் உமேஷ் சின்கா, டாக்டர் சந்தீப் சக்சேனா, இயக்குனர் நிகில்குமார், தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் (செலவினங்கள்) திலீப் சர்மா ஆகியோர் கலந்து கொண்டு வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாட்டு பணிகள் குறித்து பயிற்சி வழங்கினர். முன்னதாக முதுநிலை துணைத்தலைவர் ஆணையாளர் உமேஷ் சின்கா வாக்கு எண்ணிக்கை முறைகள் குறித்த கையேட்டினை ெவளியிட்டார்.

இப்பயிற்சியில் பங்கு பெற்றவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழிமுறைகள் மற்றும் விவிபாட்டில் வாக்குச்சீட்டுகளை எண்ணும் முறை மற்றும் அஞ்சல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் இ.டி.பி.பி.எஸ். மூலம் பெறப்பட்ட வாக்குகளை எண்ணும் முறை தொடர்பான வழி முறைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி முகாமில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கேரளா தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா மற்றும் 3 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டத்திற்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தை அனைத்து தேர்தல் அலுவலர்களும் பார்வையிட்டனர்.