வேலூர்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் அதிகாரி நேரில் ஆய்வு…

வேலூர்:-

அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான சி.அ.ராமன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, காட்பாடி, ஆற்காடு மற்றும் திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றும் சோளிங்கர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான சி.அ.ராமன் நேற்று நேரடியாக பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிக்க வைக்கப்பட்டுள்ள வீடியோ கேமராக்கள் இயங்குவதையும், இந்த ஆறு தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்குவதை கண்காணித்திடும் கட்டுப்பாட்டு அறைகளில் தொலைகாட்சி மூலம் பதிவு செய்வதையும் முறையாக இயங்குவதையும் நேரடியாக பார்வையிட்டார். பின்னர் மத்திய பாதுகாப்புப்படையின் கண்காணிப்பு பணிகளையும் பாதுகாப்பு வீரர்களிடம் கேட்டறிந்தார்.

தினமும் வேட்பாளர்களின் முகவர்கள் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பை கண்காணித்திட வருகை புரிந்தார்களா என்பதை பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் வாக்குஎண்ணிக்கை நாளன்று செய்யப்படவுள்ள பாதுகாப்பு வசதிகளையும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான சி.அ.ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.