தற்போதைய செய்திகள்

வாக்கு வங்கிகளுக்காக மக்களை திசை திருப்பும் விஷம பிரச்சாரம் ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது – குடியுரிமை சட்டம் குறித்து பேரவையில் அமைச்சர் உதயகுமார் ஆவேசம்

சென்னை

வாக்கு வங்கிகளுக்காக மக்களை திசை திருப்பும் விஷமப் பிரச்சாரம் ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது என்றும் சிறுபான்மையினர் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பேரவையில் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்து பேசியதாவது:-

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (NPR) இந்தியாவில் 6 மாதங்களோ அல்லது அதற்கு மேலே வசிக்கின்ற அனைத்து நபர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் தனிநபர் விவரங்கள் தகவல் அளிக்கும் குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படியே ஆவணங்கள் ஏதுமின்றி பதிவு செய்யப்படுகின்றன. 2010 ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான கணக்கெடுப்பில், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரினுடைய ஏறத்தாழ 14 விவரங்கள் அதிலே சேகரிக்கப்பட்டன.

2020-ம் ஆண்டு நடத்தப்படவுள்ள தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கான கணக்கெடுப்பின்போது குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரினுடைய விவரங்கள் அந்த 14 விவரங்களிலே புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிற, தற்போது நாம் அச்சப்படுகிற, அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் எப்படியிருக்கும் என்று யூகமாக சொல்லப்படுகின்ற, அந்த கருத்துக்களிலே தாய்மொழி, தந்தை, தாயார், துணைவியார் விவரம், ஆதார், கைபேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் எண் இருப்பின் அதனுடைய விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமென்று அந்த 14 விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றனர்.

அதில் 10,13 மற்றும் 14 இனங்களிலே கேள்விகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அதைப்பற்றி தான் தற்போது ஓர் அச்சம் ஏற்பட்டு வெளியில் பல்வேறு விவாதங்களுக்கு உட்பட்டிருக்கின்றன. இதிலும் என்ன சொல்லப்படுகிறது என்றால் 2010 ஆம் ஆண்டைப்போலவே 2020-ம் ஆண்டிலும் தேசிய (Nationality) பற்றிய தகவல் அளிக்கும் குடும்ப உறுப்பினரின் கூற்றுப்படியே அவர் என்ன சொல்கிறாரோ, இந்த Nation-ல் நான் இந்தியன் அப்படி என்று சொன்னால், இந்தியன் என்று ஏற்றுக்கொள்கிறோம். அதற்கு எந்தவிதமான ஆதாரமும் தேவையில்லை.

அதைப்போல தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் கேட்கப்படும் விவரங்களுக்கு ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க தேவையில்லை. மதம் குறித்து எந்த விவரமும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் பெறப்படுவதில்லை. இந்த விவரம் என்று எல்லோருக்கும் தெரியும். இது யாருக்கு தெரியாத விஷயம் இல்லை. நான் இதைத் தெளிவுபடுத்துகிறேன்.

அதேபோல 2020-ம் ஆண்டில் நடத்தப்படவுள்ள தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான கணக்கெடுப்பின்போது அதற்கான படிவத்தில் கூடுதலாக கேட்கப்பட்டுள்ள தாய்மொழி, தந்தை, தாயார், துணைவியார் விவரம், பிறந்த இடம், பிறந்த தேதி விவரம் மற்றும் ஆதார், கைபேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் எண் ஆகிய வினாக்கள் பற்றி விவாதம் எழுந்திருக்கிற காரணத்தினாலே நம்முடைய அரசு, அம்மாவின் அரசு முதலமைச்சரால் மத்திய அரசுக்கு இதுசம்பந்தமாக கூடுதலாக விவரங்கள் கேட்டு தபால் அனுப்பப்பட்டிருக்கிறது. அதற்கான பதில் இன்னும் நமக்கு வரவில்லை. இருந்த போதிலும் கூட, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.

நம் மாநிலத்தில் NPR புதுப்பிக்கும் பணி, நாட்கள் குறித்து இதுவரை நம்மால் அறிவிக்கப்படவில்லை. எனவே தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பித்தல் குறித்து பொதுமக்கள் குறிப்பாக , சிறுபான்மையின மக்கள் எவ்வித அச்சப்படத் தேவையில்லை என்பதை இந்த அவையில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏறத்தாழ 1971-லிருந்து இரண்டு கட்டமாக நாம் அதை எடுத்து வருகின்றோம். அதிலே கேட்கப்படுகின்ற விவரங்களையும் எதிர்க்கட்சித்தலைவர் சொல்ல சொன்னார். நாங்களும் அவற்றை சொல்வதற்கு தயாராக இருக்கிறோம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை பொறுத்த அளவில் நாம் ஏற்கனவே பலமுறை விவாதித்திருக்கிறோம். அதுகுறித்து நீதிமன்றத்தில் இருக்கிறது. முதலமைச்சர் தெளிவாக சொல்லியிருக்கின்றார். எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதுவரை இந்திய தேசத்தில் இன்றைக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தை பொறுத்தளவில் நாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை பற்றியோ அல்லது அதற்குரிய குடியுரமைப் பற்றியோ பேசவில்லை. தாய் தமிழகத்தில் பிறந்த சிறுபான்மையின மக்கள், குறிப்பாக நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களுக்கு எள் முனையளவும் பாதிப்பு வராது என்பதை ஆணித்தரமாக, உறுதியாக இந்த சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடுத்து வைத்திருக்கிறார்.

ஆனால் இன்றைக்கு இந்த குடியுரிமை திருத்த சட்டத்திலே பல்வேறு ஐயப்பாடுகள் எழுந்திருக்கிறது. அதைப்பற்றி விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 16 வழக்குகளுக்கு மேல் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அது எப்படி வரப்போகிறது. அந்த விதிகள் எப்படி வரப்போகிறது. எப்படி உருவாக்க போகிறார்கள் என்பதெல்லாம் விவாதத்தில் இருக்கிறது. நாம் தமிழக சட்டமன்றத்தை பொறுத்தவரையில், ஓராண்டல்ல, ஈராண்டல்ல 30 ஆண்டுகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாவல் அரணாக இருந்திருக்கிறது என்பதற்கு எங்களால் பல்வேறு உதாரணங்களை சொல்ல முடியும்.

நான் ஏற்கனவே இந்த அவையில் சொல்லியிருக்கிறேன். நான் கூட இந்துவாகப் பிறக்காமல் இஸ்லாமியராக பிறந்திருந்தால் இன்றைக்கு பரப்பப்படுகிற இந்த உண்மையற்ற விமர்சனங்கள், ஐயப்பாடுகள் என்னையும்கூட அச்சுறுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அந்த அச்சுறுத்தலுக்கான விளக்கம் தேடி நானும் கூட போராட்டக் களத்திற்கு போகக்கூடிய ஒரு வாய்ப்பு எல்லாம் இருக்கிறது.

ஏனென்றால் இன்றைக்கு அப்படி அந்த நம்பிக்கையை ஆதாரமாக, அடிப்படையாக வைத்து இன்றைக்கு வாக்கு வங்கிகளுக்காக இப்படிப்பட்ட விஷமத்தை பரப்புகிறார்களோ என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆக வாக்கு வங்கிகளுக்காக மக்களை திசை திருப்புகிற இந்த விஷமப் பிரச்சாரம் என்பது ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

NPR ஐ பொறுத்தவரை எதிர்க்கட்சித் தலைவர் அந்த பணியை துவங்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். 2003-ம் ஆண்டும், 2010 ஆம் ஆண்டும் இதுகுறித்து சில திருத்தங்கள் செய்யப்பட்டது. 2003 ஆம் ஆண்டு மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தபோது தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு NPR மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஏதுவாக தேசிய குடியுரிம சட்டம் 1955-ன்படி குடியுரிமை விதிகள் 2003 உருவாக்கப்பட்டது. இந்த விதிகள் மூலம் தான் குடிமக்களைப் பதிவு செய்து அவர்களுக்கு ஒரு தேசிய அடையாள அட்டை வழங்க வழிவகை செய்யப்பட்டது.

அதேபோல 2010-ம் ஆண்டு மத்தியிலே தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின் போது தான் நாட்டில் அனைத்துப் பகுதிகளுக்கும் முதல்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு அங்கமாக தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) உருவாக்கப்பட்டது. அப்போது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தீர்கள். அப்போது நீங்கள் இதில் அச்சம் தெரிவித்திருந்தால் அது தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போது உள்நோக்கத்தோடு நீங்கள் அச்சம் தெரிவிப்பதை தான் இறைக்கு நாங்கள் அச்சத்தோடு பார்க்கிறோம். ஆக இன்றைக்கு நாங்கள் சொல்கிறோம். பாவம் செய்ததெல்லாம் நீங்கள். பழியை நீங்கள் எங்கள்மீது சுமத்தப்பார்க்கிறீர்கள். அது சிறுபான்மை மக்களிடத்தில் எடுபடாது.

எதிர்க்கட்சித் தலைவர் குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கிறது என்று சொல்கிறார். Secularism என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். எதிர்க்கட்சித்தலைவர் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல. தமிழர்களின் பாதுகாப்பிற்கும் இது அச்சத்தை தரும் என்று சொல்லியிருக்கிறார். முதலமைச்சர் இதுகுறித்து மிக தெளிவாக சொல்லியிருக்கிறார். தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்த போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் காஞ்சிபுரத்தில் என்.பி.ஆர் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார் என்பதை ஆதாரத்தோடு ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இந்த அவையிலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே நாங்கள் மீண்டும் சொல்கிறோம். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இதுவரையில் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. டெல்லியில் கூட தேர்தலுக்கு பிறகு தற்போது ஆர்ப்பாட்டத்தை காணோம். போராட்டத்தையும் காணோம். இப்போது அங்குள்ள எல்லோரும் அமைதியாகி விட்டார்கள். எனவே உள்நோக்கத்தோடு செய்யப்படுகிறதோ என்கிற ஒரு அச்சம் ஏற்படுகிறது. ஆகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த பாதிப்பும் வராது என்று மீண்டும், மீண்டும் சொல்கிறோம். என்ன பாதிப்பு வருகிறது என்பதை நீங்கள் சொல்லுங்கள். எங்களுக்குக் கூட புரியவில்லை. பாதிப்பு எதுவுமேயில்லை.

2010-ம் ஆண்டு என்.பி.ஆர். கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. தி.மு.க. அங்கம் வகித்த மத்திய ஆட்சியின் போது என்பதையும் நான் இந்த அவவையில் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். இதனால் எந்தவிதமான பாதிப்பும் வராது.சிறுபான்மையினர் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அம்மா அவர்களின் அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாவலனாக இருக்கும். நான் மற்ற மாநிலங்களை பற்றி சொல்லவில்லை. குறிப்பாக நம்முடைய அன்னைத் தமிழகத்தில் தாய்த் தமிழகத்தில் பிறந்திருக்கின்ற ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அரணாக சாதி, சமய வேறுபாடற்ற அரசாக, மத சார்பற்ற அரசாக புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய அரசில் முதலமைச்சர் காப்பாற்றுவார். காப்பாற்றி வருகிறத. உறுதுணையாக இருக்கிறார். இந்த என்.பி.ஆர் ஐ வைத்து மறுபடியும் குழப்பம் செய்யத் தேவையில்லை.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் அசாம் பற்றி சொன்னார். அசாமுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன வித்தியாசம் என்று சொல்கிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்ததும், அதனைத்தொடர்ந்து மதசார்பற்ற இந்தியா உருவானது. அந்த சமயத்தில் ஏற்பட்ட பிரிவிணையின்போது அதிகமான மக்கள் குறிப்பாக கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அசாம் வருவது அதிகரித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 1950 மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட புலம் பெயர்ந்தோர், அசாமை விட்டு வெளியேற்று சட்டம் 1950 ல் இயற்றப்பட்டது. இருந்த போதிலும் 1951 ஆம் ஆண்டு முதன்முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தேசிய மக்கள் தொகை பதிவேடு அசாமியில் மட்டும் தயாரிக்கப்பட்டது. அதற்கு பிறகு 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசமாக உருவெடுத்த போதும், ஏராளமான மக்கள் அசாமிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக குடிபெயர்ந்தனர்.

இதனால் 1971 மார்ச் 24-ந்தேதி நள்ளிரவு வரையான தேதியை நிர்ணயித்து அதற்கு முன்பு அசாம் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் நுழைந்தவர்களை மத்திய அரசு நிர்ணயித்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றில் அவர்கள் பெயர் இருக்கும் பட்சத்தில் அந்த பெயரை சேரத்்து 1951-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை மத்திய அரசு நாளாவது தேதி வரை சரிபாரத்து புதுப்பித்தது.

இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1985-ம் ஆண்டு மத்திய அரசுக்கும், அசாம் மாநில மாணவர் சங்கங்க ளுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படியும் 2013-ம் ஆண்டைய உசச்சநீதிமன்றத்தினுடைய உத்தரவின் படியும் 1955-ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரமைச் சட்டம் மற்றும் 2003ஆம் ஆண்டு இயற்றப்பட்ட விதிகளின்படியும் தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அங்கு இருக்கின்ற நிலைமை தமிழ்நாட்டில் இல்லை. இங்கு நாம் மிக கிளியர் ஆக இருக்கிறோம். மிகவும் தெளிவாக இருக்கிறோம். எதிர்க்கட்சி துணைத்தலைவர் பேசுவதிலே வல்லவர். அவருடைய பேச்சாற்றலை இந்த நாட்டினுடைய நன்மைக்கு காலங்காலமாக பயன்படுத்தி வந்திருக்கின்றார். இப்போது தான் அதிலே ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துகிறாரோ என்கிற பயமும், அச்சமும் எங்களுக்கு வருகிறது.

ஏனென்று சொன்னால் இன்றைக்கு தாயாக, பிள்ளையாக, மாமனாக, மாமனார், மாப்பிள்ளையாக நாம் எல்லோரும் பழகி வருகிறோம். இந்த வாக்கு வங்கிகளுக்காக இருக்கின்ற கருத்துவேறுபாடுகளின் காரணமாக எதிர்காலத்தில் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையை உருவாக்கி விடுவீர்களோ என்கின்ற அச்சம் கூட எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இன்றைக்கும் நாங்கள் தெளிவாக சொல்கிறோம்.

பண்டிகை பற்றி இந்த என்.பி.ஆர்-ல் எந்த காலமும் கிடயாது. நீங்களாக கற்பனையான ஒரு செய்தியை இந்த அவையில் பதிவு செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத்தலைவர் மக்களுக்காக பாடுபடுகிறார்கள் மக்களுக்காக உழைக்கிறார்கள். மக்களுக்காக வாழ்கிறார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் வாக்குவங்கியை மையமாக வைத்து விஷவிதையை தூவி விடாதீர்கள் என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கும், எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்தார்.

பின்ன இந்த விவாதத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து கூறுகையில், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இந்து மதத்தை பற்றி இங்கே விளக்கமாக, விரிவாக அதற்கு உள்ளே புகுந்து பலவித ஆராய்ச்சிகளை செய்து கொண்டுள்ளார். எங்களை பொறுத்தவரையுல் நாங்கள் பக்ரீத்தையும் கொண்டாடி கொண்டாடி கொண்டிருக்கிறோம். ரம்ஜானையும் கொண்டாடி கொண்டிருக்கிறோம். பொங்கலையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தீபாவளியையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது.

எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது NPR ,இஸ்லாமிய திருவிழாக்கள் NPR Manual ( 2020) ல் இடம்பெறவில்லை என்று கூறினார்.இதே கருத்தை எதிர்க்கட்சி துணைத்தலைவரும் தெரிவித்துள்ளார்.எனவே.திருவிழாக்கள் பட்டியல் NPR Manual ( 2020) 2010 லும் 2020 லும் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட லும் மேற்கூறிய இஸ்லாமிய திருவிழாக்கள் இடம்பெறவில்லை.2010 ம் ஆண்டைய NPR Manual ல் இடம்பெற்ற அனைத்து திருவிழாக்களும் 2020 லும் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஆங்கில ஆண்டு தவிர இஸ்லாமிய ஆண்டை கண்க்கிடும் வகையில் அதற்கான ஆங்கில ஆண்டோடு ஒப்பிடும் வகையில் கையேட்டில் அட்டவணை உள்ளது.கிராமப்புறங்களில் சிலர் தங்கள் பிறந்த நாள் குறித்த விபரம் தெரியாமல் இருக்கலாம்.அவர்கள் திருவிழாக்காலங்களை நினைவில் கொண்டிருந்தால்,அதன் அடிப்படையில் பிறந்த மாதத்தினை கணக்கிட ஏதுவாக இதற்கான நெறிமுறைகள் NPR கையேட்டில் இடம்பெற்றுள்ளது.2010 ல் NPR நடந்தபோது யார் மத்தியில் ஆட்சியில் இருந்தது.யார் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தார்கள்.மற்றபடி திருவிழாக்களுக்கும் NPR படிவத்திற்கும் நான் ஏற்கனவே கூறியபடி சம்பந்தம் ஏதுவுமில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.