தற்போதைய செய்திகள்

வாட்ஸ்- அப் மூலம் பிரசாரம் – திருப்பூரில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

திருப்பூர்:-

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பல்வேறு விதமாக வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடி வருகிறார். திருப்பூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோரும் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தி உள்ளனர்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், சங்கங்கள், அமைப்புகள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில், திருப்பூர் தொகுதி வேட்பாளர் பிரச்சாரத்துக்காகவும், கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கும் பணிகளுக்காகவும், வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பணிகள் துவக்கப்பட்டு உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுக்களில் பொதுமக்களின் செல்போன் எண்களை இணைத்து ஓட்டு வேட்டையாடும் பணிகள் நடந்து வருகிறது.

திருப்பூர் தொகுதியில் தேர்தல் பணிகளுக்கான வாட்ஸ் அப் எண்ணை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த எண்ணுக்கு மெசேஜ் அனுப்புவதன் மூலம் திருப்பூர் தொகுதி வேட்பாளரின் பிரசார பயண திட்டம், தேர்தல் வாக்குறுதிகள், திருப்பூர் மக்களுக்கு கழக அரசு செய்த நலத்திட்டங்கள் ஆகிய தகவல்களை பெறலாம்.

விழாவில், இதற்கான வாட்ஸ் அப் எண்ணை துவக்கி வைத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

நமது ஜீவாதார பிரச்சினைகளுக்காக 23 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியவர்கள் நமது கழகத்தினர். நமது கொள்கை அம்மா அவர்களின் லட்சிய கொள்கை. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கழக பணிகளை திறம்பட செய்து வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் பலர் வாக்குறுதிகளை அளிக்கிறார்கள்.

ஆனால் கழகம் மட்டுமே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. பெண்களுக்காக தாலிக்கு தங்கம், திருமண உதவி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றி வருகிறது அம்மா அவர்களின் அரசு. பா.ஜ.க., தலைமையிலான மத்திய அரசு நிச்சயம் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான அரசாக இருக்கும். அம்மா அவர்களின் லட்சியப்பயணமாக நமது கழகமும், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

எல்லை பிரச்சினைகளை சரிசெய்து தீவிரவாதிகளை தடுக்கும் சக்தி பா.ஜ.க. அரசுக்கு இருக்கிறது. 2 கோடியே 7 லட்சம் மக்களுக்கு பொங்கல் பரிசு இந்த அரசு வழங்கி இருக்கிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாயை இந்த அரசு வழங்க உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் கே.என்.விஜயகுமார், சு.குணசேகரன், கரைப்புதூர் நடராஜன், கட்சி நிர்வாகிகள் வெ.பழனிசாமி, ஜெ.ஆர்.ஜான், ராதாகிருஷ்ணன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம், பி.கே.முத்து, டாக்டர் சீனியம்மாள், எஸ்.பி.என்.பழனிசாமி, தம்பி மனோகரன், கருணாகரன், ஏ.எஸ்.கண்ணன், பட்டுலிங்கம், டெக்ஸ்வெல் முத்துசாமி, கணேஷ், வி.கே.பி. மணி, கலைமகள் கோபால்சாமி, முருகசாமி, வி.கே.பி.மணி, சிட்டி பழனிசாமி, உஷா ரவிக்குமார், அட்லஸ் லோகநாதன், தர்மலிங்கம், ஆனந்தன், சன்முகசுந்தரம், கீதா, சேகர், காலனி செல்வராஜ், லோகநாதன், பரமராஜன், உள்பட பலர் பங்கேற்றனர்.