தற்போதைய செய்திகள்

வாய்க்கு வந்தபடி உளறுகிறார், ஸ்டாலின் நாக்கில் சனி : டாக்டர் ராமதாஸ் சந்தேகம்…

தருமபுரி:-

வாய்க்கு வந்தபடி உளறும் ஸ்டாலின் நாக்கில் சனி இருக்குமோ என்று டாக்டர் ராமதாஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

கழக வெற்றி கூட்டணி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர்களை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரூர், கம்பை நல்லூர், ரேகடஹள்ளி, சோளக்கொட்டாய் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் திராவிட முன்னேற்ற கழகம் உள்ளது. இதை அவங்க பாஷையில் சொல்லனும்னா இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் அசைத்து கூட பார்க்க முடியாது. 18 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் அஇஅதிமுக வெற்றி பெறும். ஸ்டாலின் என்னை பற்றி தாறுமாறாக பேசுகிறார், அதே மாதிரி முதலமைச்சர் பற்றியும் பேசுகிறார். விவசாயத்தை பற்றி தெரியாதவர் ஸ்டாலின்.

நான் ஒரு விவசாயி தைலாபுரம் என்ற ஒரு கிராமத்திலிருந்து விவசாயம் செய்கிறேன். அதே மாதிரி முதலமைச்சரும் ஒரு விவசாயி. என்னுடைய தோட்டத்தில் விவசாயத்தை என் மனைவி பார்த்து கொள்கிறார். முதலமைச்சரின் மனைவியும் விவசாயத்தை பார்த்துக் கொள்கிறார். அடிப்படையில் நாங்கள் விவசாயிகள். விவசாயிகள் பிரச்சினைகள் எங்களுக்கு தான் தெரியும்.முதலமைச்சரை மண்புழு என்று கூறுகிறார். அவர் கூறுவதுபோல மண்புழு விவசாயிகளின் உற்ற நண்பன்.

முதலமைச்சர் விவசாயிகளின் நண்பன். வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவரது நாக்கில் சனி இருக்குமோ? விஷம் இருக்குமோ? என சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனது என்னால் தான். நான் கலைஞரிடம் போய் ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி தாருங்கள் என்று சொன்னேன். துணை முதலமைச்சராக இருந்து ஸ்டாலின் என்ன சாதனை செய்தார். ஒரு சாதனையும் செய்யவில்லை.

2006 முதல் 2011-ம் ஆண்டு வரை 5 ஆண்டு காலம் வரைக்கும் கலைஞர் ஆட்சியில் இருந்தாலும், இரண்டு ஆண்டுகாலம் துணை முதல்வராக ஸ்டாலின் இருந்தார். அந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் எங்களின் 18 சட்டமன்ற உறுப்பினர்களால் தான் ஆட்சி இருந்தது. காங்கிரசும், நாங்களும் சேர்ந்து தான் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தோம். மத்திய அமைச்சராக உலக அளவில் சாதனைக்காக 4 விருதுகள் வாங்கியது டாக்டர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே. இந்தியாவில் வேறு யாருமில்லை. 78 ஆண்டுகாலம் எந்த அமைச்சரும் வாங்கியது இல்லை. ஒரேநாளில் 16 மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தது அன்புமணி ராமதாஸின் மிகப் பெரிய சாதனை. இதை நான் தான் கொண்டு வந்தேன் என ஸ்டாலின் பொய் பேசுகிறார்.

தருமபுரியில் மருத்துவக் கல்லூரி வருவதற்கு காரணம் அன்புமணி ராமதாஸ் தான். இங்கே எதிர்த்து நிற்பவரை பற்றி ஒன்றே ஒன்று தான் சொல்ல வேண்டும், ஐயோ பாவம். அன்புமணி டெல்லிக்கு சென்றால் இந்த மாவட்டத்திற்கு நிறைய திட்டங்கள் செய்வார். இந்த மாவட்டம் வளம் பெறும். தருமபுரி மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக இருந்தாலும் படிப்பில் முன்னேறிய மாவட்டமாக திகழ்கிறது. உயர் கல்வியில் 98.41 சதவீதம் முன்னேறி உள்ளது.

‘மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என கவிஞர் கூறியதை போல தமிழக பெண்களுக்கு மூன்று சக்திகள் உள்ளன. படைப்பாற்றல் சக்தி, காக்கும் சக்தி, அழிக்கக்கூடிய சக்தி என மூன்று சக்திகளும் உங்களிடம் உள்ளது. மகா சக்தி வாய்ந்தவர்கள் பெண்கள். பெண்கள் வாக்கு வங்கி அதிகம். திமுகவுக்கு நீங்கள் வாக்களிக்காதீர்கள். ஆவதும் பெண்ணாலே ஆவதெல்லாம் பெண்ணாலே, இந்த தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வேண்டும். இந்த தொகுதியில் தான் மாம்பழம் அதிக வாக்குகள் வாங்கியது என்ற செய்தி வெளி வரவேண்டும். அடுத்த கூட்டம் வெற்றி விழா கூட்டமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

இந்த கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, கழக விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் பசுபதி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் பி.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.