சிறப்பு செய்திகள்

வாரிசு அடிப்படையில் தி.மு.க. தலைவரான ஸ்டாலின் தேர்தலோடு காணாமல் போவார் – கோவை தொண்டாமுத்தூரில் முதல்வர் பரபரப்பு பேச்சு…

கோவை:-

அமைச்சர்களை விமர்ச்சி எந்த தகுதியும் ஸ்டாலினுக்கு கிடையாது என்றும், வாரிசு அடிப்படையில் தி.மு.க. தலைவரான ஸ்டாலின் தேர்தலோடு காணாமல் போவார் என்று தொண்டாமுத்தூரில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்குசேகரித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கோவை சுந்தராபுரம், குனியமுத்தூர், மற்றும் தொண்டாமுத்தூரில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வலிமையான, திறமையான பாரத பிரதமரை தேர்வு செய்ய நடைபெறும் தேர்தல் இது. ஆகவே தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைத்துள்ளோம். ஆனால் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் நடப்பதை போல் நடைபெறாத, பொய்யான தேர்தல் வாக்குறுதிகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டவர் தான் மு.க.ஸ்டாலின். தமிழக வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிந்தவர்கள். 2 ஏக்கர் நிலம் தருவதாக பொய்யான வாக்குறுதியை அளித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. எத்தனை பேருக்கு 2 ஏக்கர் நிலம் தந்தீர்கள் என கூற முடியுமா? அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 அளித்தது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு. தேர்தல் முடிந்தவுடன் ஏழை குடும்பத்தினருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடங்கும்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறந்த அரசியல் வியாபாரி. அவர் கழகத்தையும், நமது அமைச்சர் பற்றியும், என்னை பற்றியெல்லாம் எல்லை மீறி வாய்க்கு வந்ததெல்லாம் பேசி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்த மு.க.ஸ்டாலின் என்னை பற்றியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் பற்றியும் பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். குற்றச்சாட்டு கூறும்போது பார்த்து பேச வேண்டும்.

முதலமைச்சரையும், உங்கள் தொகுதியை சேர்ந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்தும் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி விமர்சனம் செய்து உள்ளார். மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு நிறைவேறவில்லை. ஆகவே அந்த ஆத்திரத்தில் அவர் வாய்க்கு வந்ததை பேசிவிட்டு போய் உள்ளார். புரட்சித்தலைவி அம்மா இறந்தவுடன் கழக ஆட்சி சில நாட்களுக்கு தான் இருக்கும் என்று நினைத்தார். அது நடக்கவில்லை. தினகரனால் கட்சி இரண்டாக உடையும் என்று நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. ஆனால் இந்த தேர்தலில் நாம் மெகா கூட்டணி அமைத்திருப்பது அவருக்கு வயிற்றெரிச்சல்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சிறப்பான செயல்பாடுகளினால் மத்திய அரசின் பல விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் 50 ஆண்டு காலங்களில் இல்லாத வகையில் மிகப்பெரிய வளர்ச்சியை கழக அரசு செய்து உள்ளது. தொண்டாமுத்தூர் தொகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம், அரசு கலைக்கல்லூரி, அரசு பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள், கான்கிரீட் சாலைகள், அனைத்து சாலைகளும் விரிவாக்கம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இந்த பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிறைவேற்றியுள்ளார்.

ஆனால் கோவைக்கு வந்த மு.க.ஸ்டாலின் ஏதோ உளறி விட்டு போயிருக்கிறார். ஊழலின் ஒட்டுமொத்த உருவாக திகழ்ந்த தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பணிகளை காட்டிலும் 3 மடங்கு அதிகமாக மக்கள் திட்டங்களை கழக அரசு நிறைவேற்றியுள்ளது. 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றி வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.

மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது தமிழகத்துக்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்தார். அவரை விட 3 மடங்கு அதிகமான திட்டங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிறைவேற்றியுள்ளார். உள்ளாட்சி தேர்தலை தடுத்தது யார்? நடத்தவிடாமல் வழக்கு போட்டது யார்?. தி.மு.க. தான். இருந்தாலும் கழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் இருந்தால் எப்படி பணிகள் நடக்குமோ அதுபோல வளர்ச்சிப்பணிளை நிறைவேற்றி வருகிறது.

ஊழலுக்கு பெயர் போனது தி.மு.க.. இந்தியாவிலேயே ஊழல் குற்றச்சாட்டுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி எது என்றால் அது தி.மு.க. ஆட்சி தான். ஊழலை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன அருகதை?. அவருக்கு வாய் கொழுப்பு. பொய் பேசுவதற்கென்று நோபல் பரிசு கொடுத்தால் தான் அது மு.க.ஸ்டாலினுக்கு தான் கிடைக்கும். எங்களை பார்த்து தேர்தலுக்கு பயப்படுகிறோம் என்கிறார். நாங்கள் என்றுமே தேர்தலுக்கு பயப்பட்டதில்லை. கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தினோம். அதில் 90 சதவீதம் பேர் அ.தி.மு.க. வினர் தான் வெற்றிபெற்றனர். தேர்தலை கண்டு தி.மு.க. தான் பயப்படுகிறது. அதனால் தான் நீதிமன்றத்தில் தடையாணை வாங்குகிறீர்கள்.

மு.க.ஸ்டாலின் தி.மு.க.வில் எப்படி அமைச்சர் ஆனார், துணை முதல்வர் எப்படி ஆனார் என்பது எல்லாம் எங்களுக்கு தெரியும்.
வாரிசு அடிப்படையில் தி.மு.க தலைவரான மு.கஸ்டாலின் உலக தலைவர் போல பேசுகிறார். இந்த தேர்தலோடு அவர் காணாமல் போய்விடுவார். 2 ஆண்டுகளாக பேச முடியாமல் இருந்த மறைந்த கருணாநிதியை தந்தை என்று கூட பார்க்காமல் பதவி வெறி பிடித்து வீட்டில் சிறை வைத்தவர் தான் மு.க.ஸ்டாலின்.

வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்திருந்தால் அவர் நன்றாக பேசியிருப்பார். ஆனால் மு.க.ஸ்டாலின் அதை செய்யவில்லை. ஏனென்றால் சிகிச்சை அளித்திருந்தால் கட்சி தலைவர் பதவியை கருணாநிதி கொடுக்க மாட்டார் என்று ஸ்டாலினுக்கு தெரியும். ஆகவே தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக தந்தையை வீட்டிலேயே அடைத்து பேச முடியாத நிலையை உருவாக்கினார் மு.க.ஸ்டாலின்.

அந்த சூழ்நிலையில்கூட கருணாநிதி மு.க.ஸ்டாலினை நம்பவில்லை. நம்மையே இப்படி பாடுபடுத்துகிறானே கட்சியை என்ன செய்வார் என்று நினைத்து மறைந்த கருணாநிதி கட்சியை மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கவில்லை. அதனால் தான் கருணாநிதி இறக்கும்வரை கடைசி வரை செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தார். அவர் இறந்த பிறகு அவசர அவசர கூட்டத்தை கூட்டி மு.க.ஸ்டாலினால் தி.மு.க. தலைவராக முடிந்தது.

ஆனால் நாங்கள் அப்படியில்லை. சாதாரண கிளை செயலாளராக பணியை துவக்கிய நான் ஒன்றிய பொறுப்பாளர், மாவட்ட பொறுப்பாளர், மாநில பொறுப்பாளர், சட்டமன்றம், நாடாளுமன்றம் என படிப்படியாக உயர்ந்து தற்போது முதல்அமைச்சராக உள்ளேன். ஆனால் மு.க.ஸ்டாலின் தந்தை தி.மு.க. தலைவர் முதலமைச்சராக இருந்தார். தந்தையின் செல்வாக்கில் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆனார். பிறகு அமைச்சர், துணை முதலமைச்சர், செயல்தலைவர் தற்போது தி.மு.க. தலைவராக உள்ளார்.

நாங்கள் உழைத்து இந்த பதவிக்கு வந்துள்ளோம். மு.க.ஸ்டாலின் உழைக்காமலேயே இந்த பதவிக்கு வந்துள்ளார். எனவே தயவு செய்து உழைத்து படிப்படியாக வந்த எங்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. இனி தலைவரின் மகன்கள் ஆட்சிக்கு வரமுடியாது. தொண்டன் தான் இனி ஆட்சி செய்வான். முதல்வராக இங்கு நின்று பேசவில்லை. உங்களை போல் தொண்டனாகத் தான் இங்கு பேசுகிறேன். மின்வெட்டால் இருண்டு கிடந்த தமிழகத்தை புரட்சித்தலைவி அம்மாவின் கழக அரசு அமைந்தபிறகு சிறந்த நிர்வாகத்திறமை காரணமாக தடையில்லா மின்சாரம் என்ற நிலையை கொண்டு வந்தோம்.

மேலும் தடையின்றி மின்சாரம் வழங்கி வருகிறோம். மக்களின் எண்ணங்களை புரிந்தவன் நான். மக்களை மதிக்க தெரியாதவர் மு.க.ஸ்டாலின். தரங்கெட்ட தலைவர் ஸ்டாலின். அரக்க குணம் படைத்த ஸ்டாலினே அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி கழகத்தின் கோட்டை. பொள்ளாச்சி தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்த கழக வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு வேண்டுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

தேர்தல் பிரசாரத்தின் போது கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி நாடாளுமன்ற கழக வேட்பாளர் சி.மகேந்திரன், கழக தேர்தல் பிரிவு செயலாளரும், சட்டப்பேரவை துணைத்தலைவருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரசேகர், கழக நிர்வாகிகள் என்.கே.செல்வதுரை, மணிமேகலை, என்.எஸ்.கருப்புசாமி, டி.எஸ்.ரங்கராஜ், ஆர்.குலசேகரன், பி.கே.சீனிவாசன், பெருமாள்சாமி, எஸ்.எம்.உசேன், ஆர்.சசிக்குமார் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.