தற்போதைய செய்திகள்

வாரிசு அரசியல் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாட்டையடி…

மதுரை

வாரிசு அரசியல் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாட்டையடி கொடுத்துள்ளார்.

தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். செல்லம்பட்டி ஒன்றியம் தி.விலக்கு, செம்பட்டி ஊராட்சி, கட்டத்தேவன்பட்டி, கள்ளபட்டி, வேப்பனூத்து, தும்மக்குண்டு, சிந்துபட்டி, திடியன், நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, கருமாத்தூர், மீனாட்சிபட்டி, கண்ணனூர், முதலைக்குளம், கீழப்பட்டி, விக்கிரமங்கலம், எரவார்பட்டி, கல்கொண்டான்பட்டி, அய்யனார்குளம், குறவகுடி, பாப்பாபட்டி, வாலாந்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் பிரச்சாரத்தின் போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

செல்லம்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் என்றைக்கும் அம்மாவின் மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள். இன்றைக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அம்மாவின் வழியில் சிறப்பாக ஆட்சி புரிந்து வருகின்றனர். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தும் போது அதற்கு முட்டுக்கட்டை போடும் செயலை தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் செய்து வருகின்றன. அதையெல்லாம் தகர்த்தெறிந்து உங்களுக்கு அம்மாவின் அரசு திட்டங்களை வழங்கி வருகிறது. நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க இரட்டை இலை சின்னத்திற்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

தேனியில் பிரச்சார கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வாரிசு அரசியலை நாங்கள் செய்வதாக கூறியுள்ளார். கழகத்தில் இன்றைக்கு ரவீந்திரநாத்குமார், வி.வி.ஆர்.ராஜ்சத்யன், ஜெயவர்தன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இவர்களெல்லாம் அம்மாவால் ஏற்கனவே அடையாளம் காட்டப்பட்டு மக்கள் பணியாற்றியவர்கள். தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ரவீந்திரநாத்குமார், கடந்த 20 வருடங்களாக நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அம்மாவின் சாதனைகளை சொல்லி கழக பணியாற்றியுள்ளார்.

ஆனால் தி.மு.க.வில் ஆற்காடு வீராச்சாமி மகன், துரைமுருகன் மகன், பொன்முடியின் மகன் உள்ளிட்டோர் மக்கள் பணியாற்றாமலேயே நேரடியாகவே வாரிசு என்ற அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாரிசு அரசியல் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. அது மட்டுமல்ல ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் அம்மா மறைவில் மர்மம் இருப்பதாக கூறி ஓட்டு வாங்க நினைக்கிறார். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது போல் ஸ்டாலின் பேச்சு உள்ளது. பொய் வழக்கு போட்டு அதன் மூலம் அம்மா அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு தி.மு.க. தான் முக்கிய காரணம். இது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

உசிலம்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 58 கால்வாய் திட்டம் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கிடப்பில் போடப்பட்டது. இந்த 58 கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தற்போது இரண்டு முறை வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். தினகரன் அணிக்கு பரிசுபெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே இருப்பது காலி பெருங்காய டப்பா. இந்த தேர்தலில் தினகரன் அணிக்கு அனைத்து இடங்களிலும் தோல்வியை மக்கள் பரிசாக வழங்குவார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.