தற்போதைய செய்திகள்

வாரிசு அரசியல் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை – கோவை பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு…

கோவை:-

வாரிசு அரசியல் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்று ேகாவை பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி கழகம் சார்பில் கழக கூட்டணி கட்சியான பா.ஜ.க. வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்கு கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வழி நடத்தி வருகின்றனர். அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களும் முழுமையாக செயல்பட்டு வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான அரசு இருந்தால் தமிழகம் இரண்டு மடங்கு வளர்ச்சி அடையும்.

தமிழகத்தில் ஊழல் கூட்டணியாக திமுக உள்ளது. ஒரு சதவீத ஓட்டு வங்கி கூட இல்லாத காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் பிரதமர் என்கிறார். அதன் கூட்டணி கட்சிகள் யார் பிரதமர் என்று சொல்ல முடியாத நிலையில் உள்ளன. 44 ராணுவ வீரர்களை கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 360 க்கும் மேற்பட்டோரைக் கொன்றுள்ளோம். நமது ராணுவம் சிறப்பான பணி செய்துள்ளது. மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறது. கடந்த 5 ஆண்டுகள் விலைவாசி கட்டுக்குள் வந்துள்ளது. உலக வல்லரசு நாடுகள் வரிசையில் இந்தியா பொருளாதாரத்தில் 6 இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் கழகத்தின் தலைமையிலான மெகா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணி மாபெரும் தோல்வியை சந்திக்கும் ஸ்டாலின் அடுத்த வைகோவாக மாறுவார். வாரிசு அரசியல் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது.

இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

கூட்டத்தில் கழக நிர்வாகிகள் எஸ்.ஆர்.அர்ஜுனன், தேவராஜ், ரமேஷ், லீலாவதி உண்ணி, ராஜேஸ்வரி, தங்கராஜ், பாரதி, சமத்துவ மக்கள் கட்சி வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.