திருச்சி

வாழ்க்கையில் முன்னேறி சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் – மாணவிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுரை….

திருச்சி,

மாணவிகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறி சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அட்டல் ஆய்வகத்தை மாணவிகளின் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி திறந்து வைத்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தின் நோக்கம் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும், படைப்பாற்றலையும், திறமைகளையும் ஊக்குவிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். கடந்த ஆண்டு மாவட்டத்தில் மாணவர்களின் அறிவியல் ஆய்வக கண்காட்சி நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு மாணவர்களின் அறிவியல் திறமை வெளிக்கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் ஆராய்ச்சி செய்யவும், சாதனைகள் செய்யவும் இந்த அறிவியல் ஆய்வகம் பயனுள்ளதாக இருக்கும். கடந்த காலங்களில் பள்ளிகளில் செயல்முறை விளக்கம் குறைவாக இருந்தது. ஆனால் தற்பொழுது இந்த நிலைமாறி மாணவர்கள் நேரடியாக செயல்முறை விளக்கத்தை செய்து பார்க்கும் வகையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

இணையதளங்களை பயன்படுத்தும் போது மாணவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்கக் கூடிய நிலை உள்ளது. நமது கல்விக்கும் இணையதளம் உதவியாக உள்ளது. மேலும் நமது கவனத்தை திசை திருப்பக் கூடிய வகையில் உள்ள விஷயங் களை தவிர்க்க வேண்டும். மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முன்மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்து கொடுக்கப்படும். முன்மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இப்பள்ளிக்கு தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் நிதி வழங்க உள்ளது. இந்த அறிவியல் ஆய்வகத்தை மாணவிகள் முழுமையாக பயன்படுத்தி தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். படிப்பில் மட்டுமே முழு கவனத்தை செலுத்தி அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வி கற்க வேண்டும். சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் குறுவளமையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். மேலும் 5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் மையத்தையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மா.இராமகிருட்டினன், லால்குடி மாவட்ட கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை செ.ஆரோக்கியமேரி, மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் ரேணுகா மற்றும் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.