இந்தியா மற்றவை

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியை இஸ்ரோ கைவிடவில்லை – தலைவர் சிவன்பேட்டி

பெங்களூரு:-

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியை இஸ்ரோ கைவிடவில்லை என்று அதன் தலைவர் சிவன் கூறினார்.

நிலவின் தென்துருவத்தில் கடந்த 7-ந்தேதி அதிகாலையில் தரை இறங்கி விடும் என சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.ஆனால் விக்ரம் லேண்டர், தரை இறங்க வேண்டிய இடத்தை அடைவதற்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, தரை கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பு துண்டானது. விக்ரம் லேண்டர் மெல்ல, மெல்ல தரை இறங்க முடியாமல் அதிவேகமாக வந்து விழுந்து விட்டது தெரிய வந்தது.

விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் 14 நாட்கள்தான். எனவே விக்ரம் லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசா ஆகியவை முயற்சித்தன. அந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் கே.சிவன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியை இஸ்ரோ விட்டுவிடவில்லை. ஆனால் இப்போது அது சாத்தியம் இல்லை. பல நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடர்பு ஏற்படுத்துவது என்பது மிகக்கடினமான ஒன்று என்று கருதுகிறேன். ஆனால் முயற்சிப்பதில் தவறு ஒன்றும் இல்லை.அதிவேகத்தில் வந்துதான் லேண்டர் விழுந்திருக்கிறது. விழுந்த அதிர்வால் அதனுள் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.

மேலும், தகவல் தொடர்பு ஆன்டெனா எங்கு நோக்கி இருக்கிறது என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்துவது என்பது மிகக்கடினமானதுதான்.அதே நேரத்தில் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் (சுற்றுகலன்) நல்ல நிலையில் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.