சிறப்பு செய்திகள்

விஜயகாந்த்-ராமதாஸ் சந்திப்பு : இணைந்து பிரசாரம் செய்ய முடிவு…

சென்னை:-

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்  சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.இ.அ.தி.மு.க மாபெரும் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, பா.ம.க, தே.மு.தி.க, த.மா.கா, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ், புதியநீதிக்கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.

இந்த கூட்டணியில் பாமக-7, பாஜக – 5, தே.மு.தி.க –-4, என்.ஆர்.காங்கிரஸ், த.மா.கா, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தை சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். உடன் அன்புமணி ராமதாஸ், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, மற்றும் பா.ம.க நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இருவரும் முடிவு செய்ததாக தெரிகிறது.

பின்னர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-

இந்த சந்திப்பு விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே நாங்கள் வந்திருக்கிறோம். இந்த சந்திப்பு நல்லபடியாக முடிந்தது என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் உங்களுடன் அ.தி.மு.க அமைச்சர்கள் வந்துள்ளார்கள். தொகுதி குறித்து ஏதாவது பேசினீர்களா என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த ராமதாஸ், தொகுதிப் பங்கீடு தொடர்பாக நாங்கள் எதுவும் பேசவில்லை. தொகுதி விஷயத்தில் எந்த காலதாமதமும் இல்லை. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற தாமதம், சகஜமான ஒன்று தான் என்றார்.