இந்தியா மற்றவை

விண்வெளித்துறையில் இந்தியா இன்று மிகப்பெரிய சாதனை – பிரதமர் மோடி உரை..

 

விண்வெளியில் தாழ் நீள்வட்டப்பாதையில் சுற்றி வந்த செயற்கை கோளை தாக்கி இந்தியா வெற்றிகரமாக அழித்துள்ளது.

இதனை தொடர்ந்து விண்வெளித்துறையில் சூப்பர் பவர் எனும் உச்ச நிலையை இந்தியா அடைந்துவிட்டதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று காலை 11.45 மணி முதல் நண்பகல் 12 மணி வரை உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அப்போது மிக முக்கியமான ஒரு செய்தியை வெளியிட உள்ளதாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து மோடி 12.25 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது விண்வெளித்துறையில் இந்தியா இன்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாக மோடி கூறினார்.அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளித்துறையில் இந்தியா அந்த சாதனையை நிகழ்த்தியிருப்பதாகவும் ,  நான்காவது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாகவும் மோடி குறிபிட்டார்.

அதன்படி விண்வெளியின் தாழ் நீள்வட்ட பாதையில் செயல்பாட்டில் இருந்த செயற்கை கோளை A-SAT எனும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை பயன்படுத்தி இந்தியா வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் வான் வல்லமையை நிலைநாட்டும் வகையில் மிஷன் சக்தி என்ற பெயரிலான இந்த தாக்குதலை இந்தியா மூன்றே நிமிடங்களில் வெற்றிகரமாக நடத்தி முடித்தாகவும் மோடி தெரிவித்தார்.

சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே செயற்கை கோளை இந்தியா தாக்கி அழித்துள்ளதாகக் கூறிய மோடி, விண்வெளி போட்டியில் ஆயுதங்கள் கூடாது என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு என்றும் விளக்கம் அளித்தார்.தற்காப்பு நடவடிக்கையாகவே இந்தியா ஏ சாட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாகவும் விண்வெளி ஆயுதப்போட்டிக்காக இல்லை என்றும் மோடி கூறினார்.

இதன் மூலம் விண்வெளித்துறையில் சூப்பர் பவர் எனும் அந்தஸ்து இந்தியாவிற்கு கிடைத்துவிட்டதாகவும் அவர் கூறினார். விண்வெளியில் எதிரிகளை எதிர்கொள்ளும் வல்லமை தற்போது இந்தியாவிடம் உள்ளதாக நாட்டு மக்களுக்கு மோடி தெரிவித்துக கொண்டார்.மிஷன் சக்தியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனக் கூறி தமது உரையை மோடி நிறைவு செய்தார்.