சிறப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு – கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு…

சென்னை:-

ஆசிய தடகள விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதிக்கு ரூ.15 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜூக்கு ரூ.10 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்படுவதாக கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் 2019-ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகளப் போட்டியில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி கோமதி மாரிமுத்து அவர்களுக்கும், ஆசிய தடகளப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த திரு. ஆரோக்கிய ராஜீவ் அவர்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் இதயமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ள இவர்கள் இருவரும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு மேலும் பல வெற்றிகளைப் பெற்று, இந்தியாவிற்கும், தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்றும் மனதார வாழ்த்துகிறோம்.

இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் பல்வேறு வகைகளில் உதவிகளைச் செய்து, அவர்கள் உற்சாகத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களைப் பெற்று தமிழ் நாட்டிற்குப் பெருமை சேர்த்திட வழிவகை செய்து தந்துள்ளார்கள் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அந்த வகையில், இவ்விரு விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் விதமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள செல்வி கோமதி மாரிமுத்து அவர்களுக்கு 15 லட்சம் ரூபாயும்; வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள திரு. ஆரோக்கிய ராஜீவ் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன், இவர்களின் சாதனைகள் மென்மேலும் தொடர வேண்டும் என மனதார வாழ்த்துகிறோம்.