தற்போதைய செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு அரசு உதவத் தயார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி…

மதுரை:-

விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி அளித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வருவாய் துறை அமைச்சர் ஆர்பிக் உதயகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட துணைச் செயலர் அய்யப்பன், பகுதி கழக செயலாளர் பன்னீர்செல்வம், ஐ.பி.எஸ். பாலமுருகன், ஏ.கே.பி. சிவசுப்பிரமணியன், கார்த்திக், செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விளையாட்டுத்துறையை ஊக்குவித்து வந்தார். அதுமட்டுமல்லாது நேரு விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு பரிசுத் தொகையும் அதற்குரிய கவுரவத்தையும் வழங்கினார். தலைநகர் சென்னையில் உலக சதுரங்க போட்டியை நடத்தினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விளையாட்டு துறைக்கு செய்த அனைத்து திட்டங்களையும் இன்று தொடர்ந்து முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.

இந்தியாவில் 29 மாநிலங்கள் உள்ளன. ஆனால் அந்த மாநிலங்களில் விளையாட்டு துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை கணக்கிட்டால் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கும். அதேபோல் விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் தற்போது கூடுதலாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் விளையாட்டு வீரர்களுக்கு உணவு படி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதி முதலமைச்சர் ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதித்துக் காட்டும் விளையாட்டு வீரர்களுக்கு மூன்று சதவீத இடஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.

அதுமட்டுமில்லாது விளையாட்டுகளுக்கு இது போன்ற பல்வேறு திட்டங்களைை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் வழங்குவார்கள் தற்போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டியில் நீங்கள் சிறப்பாக விளையாடி வருங்காலங்களில் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தமிழக அரசிற்கு பெருமை தேடித் தர வேண்டும். உங்களுக்கு தேவையான உதவிகளை அனைத்தும் நாங்கள் செய்ய தயாராக இருக்கின்றோம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.