தற்போதைய செய்திகள்

விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றியை உறுதி செய்யுங்கள் – கழக முகவர்களுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள்…

மதுரை:-

வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புணர்வோடு செயல்பட்டு வெற்றியை உறுதி செய்யுங்கள் என்று கழக முகவர்களுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற கழக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மா எனக்குப் பின் இந்த இயக்கம் நூறு ஆண்டு காலம் ஆளும் என்றார். அதற்கேற்ப கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஆட்சியையும், கட்சியையும் போற்றி பாதுகாத்து வருகிறார்கள். அவர்கள் சொன்னது போல் இந்த ஆட்சியை வீழ்த்த சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் கழக உடன் பிறப்புகள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தி.மு.க.வினர் தில்லு முல்லுவில் கை தேர்ந்தவர்கள். எது என்றாலும் அவர்களிடம் சண்டைக்கு செல்லாமல் மேலதிகாரிகளிடம் முறையிட வேண்டும். கடைசி சுற்று வரை சோம்பல் இல்லாமல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். என முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மடல் அனுப்பி உள்ளார்கள். அதனை அனைவரும் பின்பற்றி நமது வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

கருத்துக் கணிப்பு மற்றும் கருத்து திணிப்பை நம்ப வேண்டாம். 1983-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவும் காங்கிரசும் வெற்றி பெறும் என்று ஊடகங்கள் எழுதின. யார், யாருக்கு மந்திரி பதவி கிடைக்கும், வள்ளுவர் கோட்டத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அந்த தேர்தலில் புரட்சித்தலைவர் வெற்றி பெற்றார். அன்றைக்கு கருத்துக் கணிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் புரட்சித்தலைவர். அவரை தொடர்ந்து அம்மாவும் பல்வேறு கருத்துக்கணிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நமக்கு வாக்காளர்கள் தான் எஜமானர்கள். அவர்களுக்கான பணியை திறம்பட செய்து இருக்கிறோம். நமது சாதனைகளை மக்கள் புரிந்திருப்பார்கள். தலைமை செயலகத்தில் எந்த கோப்பும் நிலுவையில் இல்லை என்ற வரலாற்று சாதனையை முதல்வர் நிகழ்த்தி இருக்கிறார். மக்கள் நமக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள். ஆகவே கவனத்தோடு செயல்பட்டு வெற்றி செய்தியை கொண்டு வாருங்கள். அம்மாவின் இறப்பிற்கு காரணமான திமுக, அம்மாவின் இறப்பை சொல்லி வாக்கு சேகரித்து இருக்கிறார்கள். திமுக என்ற தீய சக்திக்கு முடிவுகட்டும் நாளாக மே 23 இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.