தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கான தேவையான திட்டங்களை கழக அரசு தொடர்ந்து செயல்படுத்தும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி…

விருதுநகர்:-

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் வட்டம், சாத்தூர் சாலையில் அமைந்துள்ள ஆர்ய நிவாஸ் கூட்டரங்கில் வேளாண்மைத்துறை மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம் தலைமையில் விருதுநகர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டுப்பண்ணைய திட்டம் குறித்த விவசாயிகள் பெருவிழாவில் (கிஷான் மேளா) பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி 38 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.1.90 கோடி மதிப்பிலான டிராக்டர், பவர் டில்லர், சுழல்கலப்பை, களை எடுக்கும் கருவி உட்பட 169 வேளாண் இயந்திரங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். விவசாயிகளின் பெருமைகளை உலகுக்கு உணர்த்தியவர். விவசாயிகளின் நலனுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த தலைவி புரட்சித்தலைவி அம்மா. விவசாயிகளை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து அவர்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தினார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விவசாய நிலங்களில் வேலை செய்தவர். விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளின் கஷ்டங்களைப் பற்றியும் நன்கு அறிந்தவர். எனவே தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் ரூ.2000 வழங்கும் சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. எனவே வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் விடுபடாமல் கிடைக்கும். தமிழக அரசின் மூலமாக விவசாயிகளுக்கு எண்ணற்ற தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

இவ்விழாவில் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபா, இணை இயக்குநர் (வேளாண்மை) பழ.அருணாச்சலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மணிசேகரன், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.