தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் தொடர கழக வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பிரச்சாரம்…

மதுரை:-

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை ஆதரித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை கிழக்கு தொகுதியில் உள்ள ஆலாத்தூர், ஊமச்சிகுளம், கொடிமங்கலம், உசிலம்பட்டி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார். ஊமச்சிகுளம் பகுதியில் வாரசந்தைக்கு சென்று வியாபாரிகள், விவசாயிகளை சந்தித்து வாக்குசேகரித்தார்.

இந்த பிரச்சாரத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை தெற்குதொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கே.முருகேசன், நிலையூர் முருகன், ஒன்றிய துணைச்செயலாளர் திருநாவுக்கரசு, ஆலத்தூர் ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்

இந்த பிரச்சாரத்தின் போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

விவசாயிகளின் நலன் சார்ந்த ஒரே அரசு அம்மாவின் அரசு. விவசாய பெருமக்களாகிய உங்களுக்கு வட்டியில்லா கடனை அம்மாவின் அரசு வழங்கி வருகிறது, தற்போது கூட பாரத பிரதமரின் விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு முதல்கட்டமாக ரூ.2000 உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் விவசாயிகளுக்கு வேண்டிய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றனர்,

குறிப்பாக விவசாயிகளுக்கு தேவையானது தண்ணீர். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக அம்மா உயர்த்திக் காட்டினார். 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திக் காட்டுவேன் என்று மதுரையில் நடைபெற்ற விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அம்மா சூளுரைத்தார். அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றும் விதமாக 152 அடியாக முல்லைபெரியாறு அணை நீர்மட்டதை உயர்த்திக் காட்டுவோம். இதன் மூலம் இப்பகுதியில் முப்போகம் விவசாயம் நடைபெறும்.

வியாபார பெருமக்களாகிய நீங்கள் இப்போது சுதந்திரமாக வியாபாரம் செய்து வருகிறீர்கள். தி.மு.க. ஆட்சியை எடுத்துக் கொண்டால் நீங்கள் சுதந்திரமாக தொழில் நடத்திருக்க முடியாது. அந்தளவுக்கு அவர்கள் அராஜகத்தை நிகழ்த்தினார்கள். ஆகவே உங்களின் நலன் காக்கும் இந்த அரசுக்கு நீங்கள் ஆதரவு அளிக்கும் வண்ணம் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.