தற்போதைய செய்திகள்

விவசாயிகள் நலனுக்காக இ-அடங்கல் கைப்பேசி செயலி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்…

சென்னை

விவசாயிகளின் நலனுக்காக இ-அடங்கல் கைப்பேசி செயலியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 26.10.2018 அன்று தலைமை செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் விவசாயிகளின் நலனுக்காக அடங்கல் பதிவேட்டினை மின்னணு பதிவேடாக மாற்றம் செய்யும் இ-அடங்கல் திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் டாக்டர் கொ.சத்யகோபால், தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா முன்னிலையில், வருவாய் நிர்வாக ஆணையரகத்தில் விவசாயிகளின் நலனுக்கான இ-அடங்கல் கைப்பேசி செயலி திட்டத்தினையும் மற்றும் தகவல் மேலாண்மை அமைப்பு மென்பொருளையும் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இ-அடங்கல் என்பது பயிர் சாகுபடி கணக்காகும். ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் இப்பதிவேட்டில் விவசாயிகள் பருவவாரியாக சாகுபடி செய்யும் பயிர்கள், அதன் விளைச்சல் விவரம், அரசு நிலங்களில் உள்ள மரங்கள் மற்றும் இதர விவரங்களை கிராமநிர்வாக அலுவலர்கள் ஒவ்வொரு ஆண்டும் கைப்பட எழுதி பராமரித்து வருகின்றனர். இவ்வாறு கிராம நிர்வாக அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் பதிவுகள் மற்ற வருவாய் துறையை சேர்ந்த மேற்பார்வை அலுவலர்களால் ஆய்வு செய்யப்படுகிறது. அதேபோன்று விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை மற்றும் புள்ளியியல் துறையைச் சார்ந்த அலுவலர்களும் அவர்கள் எல்லைக்குள் பயிர் செய்யப்படும் சாகுபடி விவரங்களை பதிவு செய்ய தனி பதிவேடுகளை பராமரித்து வருகின்றனர்.

ஓவ்வொரு மாதமும் வருவாய்த்துறை, புள்ளியியல் துறை, விவசாயத் துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பட்டுவளர்ச்சித் துறை சார்ந்த அலுவலர்களால் உள்வட்ட, வட்ட, கோட்ட மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் மாதாந்திர பயிராய்வு கூட்டத்தில் சாகுபடி விவரங்கள் ஒத்திசைவு செய்யப்படுகிறது. மாவட்ட அளவில் ஒத்திசைவுசெய்யப்பட்டு, பயிர் சாகுபடி விவரங்கள் இறுதி செய்யப்பட்ட பின்னரே கிராம நிர்வாக அலுவலர்களால் அடங்கல் நகல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

காலங்காலமாக அடங்கல் பதிவேடானது வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டு வருவாய்த் துறையின் உயர்அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இம்முறையில் விவசாயிகள் அவர்களின் சாகுபடி விவரங்களை பதிவு செய்யவோ அல்லது பார்வையிடவோ வழிவகையில்லை. அவர்களின் குறைகளை உயர் அலுவலர்களுக்கு மேல்முறையீடு செய்ய மட்டுமே வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை கிராம நிர்வாக அலுவலர்களின் பயிர் பதிவு விவரத்தின் அடிப்படையிலேயே அடங்கல் நகல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த இ-அடங்கல் கைப்பேசி செயலியை செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்த பயிர் விவரங்களை தாங்களே பதிவேற்றம் செய்ய முடியும்.

விவசாயிகளின் நலன் மற்றும் வளர்ச்சியில் அக்கறை கொண்ட இந்த அரசு அவர்களை இ-அடங்கலில் ஒருமுக்கிய பங்குதாரராக கொண்டு செயல்பட வழிவகை செய்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களின் பணியினை எளிமைப்படுத்தவும், விவசாயிகள் தாங்களே அடங்கலில் பதிவுகள் மேற்கொள்ளவும் அவர்கள் மேற்கொள்ளும் பதிவுகளை பார்வையிடவும்,அடங்கல் நகலை பெறவும், அடங்கல் பதிவேடானது மின்னனு வடிவிற்கு இ-அடங்கலாகமாற்றம் செய்யப்படுகிறது.

இந்த இ-அடங்கலை விவசாயிகள் மற்றும் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக் கலைத்துறை, புள்ளியியல் துறையினர் உபயோகப்படுத்த இயலும். இந்த இ-அடங்கல் கைப்பேசி செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இந்த செயலியின் மூலம் விவசாயிகள் அவர்கள் சாகுபடி செய்த பயிர் விவரங்களை பதிவேற்றம் செய்வதோடு மட்டுமல்லாமல் பயிர்களின் புகைப்பட விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த விவரங்களை அவர்களாகவே பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மனநிறைவு அளிக்கும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஏதேனும் காரணங்களால் விவசாயி மேற்கொண்ட பதிவிற்கும், கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்ளும் பதிவிற்கும் இடையே வேறுபாடு இருப்பின் அப்பதிவு தானாகவே மேற்பயிராய்வு செய்ய உயர் அலுவலர்களுக்கு குறியீடு செய்யப்படும். விவசாயிகளிக்கு இதில்குறை ஏதுமிருப்பின் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.

இ-அடங்கலின் மூலம் பெறப்படும் சாகுபடி விவரங்கள் மிகவும் தரமாகவும்,துல்லியமாகவும் இருக்கும் என்பதால் அரசளவில் கொள்கை முடிவுகள் எடுக்க உதவியாக இருக்கும். அரசு நிர்ணயித்த தொகையை செலுத்தி அடிப்படையில் விவசாயிகள் எந்நேரத்திலும், எவ்விடத்திலும் அடங்கல் நகலை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். இது அவர்களுக்கு எளிதில் பயிர் கடன் பெற வழிவகைசெய்யும். விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் சாகுபடி விவரங்களை தாங்களே பதிவு செய்ய வாய்ப்பளிக்கிறது. வறட்சி மற்றும் பேரிடர் போன்ற காலங்களில் சேத விவரங்களை எளிதாகவும், துல்லியமாகவும் கணக்கீடு செய்யவும், உரிய நிவாரணங்களை விரைவில் வழங்க ஏதுவாகவும் இருக்கும்.

இந்த புள்ளி விவரங்களை கொண்டு விவசாயிகளின் மேம்பாட்டுக்கான திட்டங்களை தயாரிக்க உதவியாக இருக்கும். இந்த செயலியானது தொடர்புடைய அலுவலர்களின் பணியையும் எளிதாக்குகிறது. பயிர் சாகுபடி விவரங்கள், அரசு நிலங்களில் உள்ள மரங்கள் (மரவரி) அரசுநிலங்களில் உள்ள ஆக்கிரமணங்கள் மற்றும் இதர விவரங்களை எளிதில் ஆய்வு செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிர் சாகுபடி விவரங்களையும் மற்றும் பிற நில உபயோக விவரங்களையும் பதிவு செய்ய இச்செயலி உதவியாக இருக்கும்.

மேலும், இந்த செயலியின் மூலம் உயர் அலுவலர்களும் புலத்தணிக்கை செய்து அதில் உள்ள பயிர் சாகுபடி விவரங்களை பதிவு மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்செயலியில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்களையும் ஒரு பங்குதாரர்களாக சேர்த்து அவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பயிர் சாகுபடி விவரங்களை பதிவு செய்யவும் வருவாய்த்துறை அலுவலர்கள் கள ஆய்வின்போது பயிர்பரப்பை சரிபார்ப்பதற்கும் உதவியாக இருக்கும்.

இந்த செயலியின் மூலம் பெறப்படும் புள்ளி விவரங்கள் மாநில அளவில் செய்யப்படும் பயிர் சாகுபடி விவரங்களை கண்காணிக்கவும், பல்வேறு பயிர்களின் விளைச்சல் சதவீதத்தை கணக்கீடு செய்யவும், வறட்சி மற்றும் வெள்ளக் காலங்களில் ஏற்படும் பயிர் சேதத்தினை கணக்கீடு செய்யவும், விவசாயம் மற்றும் விவசாய பெருமக்கள் தொடர்பாக அரசு எடுக்கும் கொள்கை முடிவுக்கும் மற்றும் இதர வளர்ச்சி பணிகளுக்கும் பேருதவியாக இருக்கும். இந்த செயலியின் மூலம் பல லட்சக்கணக்கான விவசாய பெருமக்கள் பயன்பெற முடியும்.

வருவாய்த் துறை, விவசாயத்துறை, தோட்டக்கலைத் துறைமற்றும் புள்ளியியல் துறையைச் சேர்ந்த அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் இந்த செயலி அமைந்துள்ளது. வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தகவல் சேகரிப்பு, தொகுப்பு மற்றும் கண்காணிப்புக்கான தகவல் மேலாண்மை அமைப்பினை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ரூ. 30 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தகவல் மேலாண்மை அமைப்பு மூலம் தகவல்களை உள்ளீடு செய்தல் மற்றும் தகவல்களை சேகரித்தல் ஆகியவை துவக்க நிலையில் செய்யப்படுவதால் ஒரே தகவல் ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் உள்ளீடு செய்ததன் மூலம் அலுவலர்கள் கையினால் எழுதும் பணியினை எளிமைப்படுத்திடவும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தகவல் மேலாண்மை அமைப்பின் மூலம் ஒவ்வொரு நிலையிலும் உள்ள அலுவலர்கள் அதனை உறுதிப்படுத்துவதன் மூலம் அளிக்கப்பட்ட தகவல்களில் தரம் உயர்வடைகிறது. இந்த முறையில் தகவல் உள்ளீடு ஒரு முறை மட்டும் செய்யப்படுவதால் ஒவ்வொரு நிலையிலும் நேரம் சேமிக்கப்படுவதுடன் தகவல் மேலாண்மை அறிக்கைகள் எந்தவொரு நேரத்திலும் ஆய்வுக் கூட்டங்களின் போதும், திட்டங்கள் தொடர்பான முடிவுகளை மேம்படுத்தவும் இது உதவுகிறது. இதன் மூலம் நிர்வாகத்தின் செயல்பாடுகள் மேலும் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஆணையர், மின் ஆளுமை, சந்தோஷ கே. மிஸ்ரா, பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், இயக்குநர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ந.வெங்கடாசலம், கஜா புயல் மறுகட்டமைப்பு, மறுவாழ்வு மற்றும் புத்துயிர் திட்ட இயக்குநர், டி.ஜெகநாதன், வருவாய் நிருவாக இணை ஆணையர் எம். லட்சுமி, இணை இயக்குநர், மின் ஆளுமை, ரமண சரஸ்வதி, மற்றும் அரசுஉயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெப்பக்காற்று பாதிப்பை முன்கூட்டியே அறிய வசதி 

டிஎன் ஸ்மாட் செயலி மூலம் வெப்பக் காற்று எச்சரிக்கை எதிர் வரும் கோடைகாலத்தில் வெப்பக் சலனம் மற்றும் வெப்பக்காற்று தொடர்பான எச்சரிக்கைகள், டி.என். ஸ்மாட் செயலி மூலம் முன்னதாகவே செயலியில் பதிவு செய்த பொதுமக்களுக்கு வழங்கப்படும். மேலும் வெப்பக் காற்று வீசும்போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை பற்றியும், செயலி மூலம் பொதுமக்கள் தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு தங்களையும் தங்கள் குடும்பத்தார் மற்றும் உறவினர்களையும், நண்பர்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.