தற்போதைய செய்திகள்

விவசாயிகள், வீடுகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் – அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்

நாமக்கல்

விவசாயிகள், வீடுகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், காடச்சநல்லூரில் புதிதாக கால்நடை கிளை நிலையம் திறப்பு விழா, நடைபெற்றது. இவ்விழாவில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி கலந்து கொண்டு புதிய கால்நடை கிளை நிலையத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழகம் முழுவதும் புதியதாக 75 கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று 5 இடங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதில் ஓர் கால்நடை ஆய்வாளர், உதவியாளர் பணியில் இருப்பார்கள். கால்நடைகளுக்கு கருவூட்டல், அவசர முதலுதவி அளித்தல், தேவையான மருந்துகள் அளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

இம்மாவட்டத்தில் உள்ள 3.55 லட்சம் கால்நடைகளுக்கு கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் சிறந்த சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்திற்கு, ஏற்கனவே இயங்கிவரும் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல அலுவலகத்தை அரசு சொந்தக் கட்டடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

மேலும் மின்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது:- 

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்திற்குட்பட்டு புதிய ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடத்திற்கான உடல்தகுதி தேர்வு நிறைவடைந்து, எழுத்து தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. அதேபோல, கணக்கீட்டாளர், உதவி மின்பொறியாளர், இளநிலை உதவியாளர் (கணக்கு) ஆகிய பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒளிவுமறைவின்றி முழுமையாக, நேர்மையான முறையில் இப்பணிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். எனவே மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறுபவர்களிடம் ஏமாந்து விட வேண்டாம்.

தமிழகத்தில் மின்நுகர்வோரின் நலன்கள் பாதிக்காத வகையில் மத்திய அரசின் புதிய மின்கொள்கை செயல்படுத்தப்படும். மத்திய அரசு தமிழக அரசிடம் இருந்து இதற்கான கருத்துக்களை கேட்டுள்ளது. உதய் திட்டத்திற்கும் மத்திய அரசின் புதிய மின் கொள்கைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. மேலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டும் என்ற உதய் திட்டத்தின் விதிமுறையை, மாநில விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு, ஏற்கனவே ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே விவசாயிகள் மற்றும் வீடுகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் போன்றவை எந்தச் சூழ்நிலையிலும் ரத்து செய்யப்படமாட்டாது. விவசாயப் பணிகளுக்கு தட்கல் முறையில் ஆண்டுக்கு 10 ஆயிரம் மின் இணைப்புகளும், சாதாரண முறையில் விவசாய பணிகளுக்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் இணைப்புகளும் தொடர்ந்து வழங்கப்படும்.

வருடந்தோறும் தமிழகத்தில் ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டு, மின்சார வாரியம் இந்த ஆண்டு 17,500 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் வழங்க தயார் நிலையில் உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு 9,900 மெகாவாட் மின் நுகர்வு காணப்பட்டது. கடந்த ஆண்டு 16,500 மெகாவாட் மின்நுகர்வு இருந்தது அதனை மின்சார வாரியம் வழங்கி, தொழில்துறை மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் பூர்த்தி அடைந்துள்ளது.

வீடுகளுக்கு பிரிபெய்டு மின்மீட்டர் பொருத்தும் பணிகள் தற்போது ஆய்வு நிலையில் தான் உள்ளது. முதற்கட்டமாக அரசு அலுவலகங்களில் அவை பொருத்தப்பட உள்ளது. அதற்கு பிறகுதான் வீடுகளுக்கு பொருத்தப்படும். இனிவரும் காலங்களில் விவசாய மின் இணைப்புகளுக்கும் பிரிபெய்டு மின்மீட்டர் பொருத்தபட இருந்தாலும், அவர்களுக்கு வழக்கம்போல, இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மத்திய அரசு, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும் கடன் உதவிகளை, தொடர்ந்து வழங்குவதற்கு உறுதி அளித்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.