தற்போதைய செய்திகள்

வெங்காயம் விலை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

சென்னை:-

வெங்காயம் விலை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

சென்னையில்  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வெங்காய விலையை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கடந்த மாதம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் குறைந்த விலைக்கு வெங்காயம் பண்ணை பசுமை மையத்தில் விற்கப்பட்டு வருகிறது.
எதிர்பார்த்த அளவு வெங்காயம் வரத்து இல்லாத காரணத்தால் அதன் விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசானது நபார்டு மூலமாக எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய உள்ளது. வருகிற 10-ந் தேதி 500 மெட்ரிக் டன் வெங்காயம் தமிழகத்திற்கு தர உள்ளது. அடுத்த கட்டமாக 500 மெட்ரிக் டன் வர இருக்கிறது.

வெங்காயத்தை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவுத்துறை மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை பாயும். தமிழக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கை காரணமாக விரைவில் வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.