தற்போதைய செய்திகள்

வெங்காயம் விலை 2 நாளில் குறையும் – அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ- ஆர்.காமராஜ் பேட்டி

சென்னை

வெங்காயம் விலை 2 நாளில் குறைந்து விடும் என்றும், பதுக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்
ஆகியோர் தலைமையில் வௌிச்சந்தையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்வது குறித்து துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ரா.கண்ணன், ஆலோசகர் ரா.கார்த்திகேயன், கூடுதல் பதிவாளர்கள் க.ராஜேந்திரன், ம.அந்தோணிசாமி ஜான்பீட்டர், ஆர்.ஜி.சக்தி சரவணன், வெ.லட்சுமி, கே.ஜி.மாதவன், பா.பாலமுருகன், டாக்டர் சு.செந்தமிழ்செல்வி, டாக்டர் அமல்தாஸ், மு.முருகன் மற்றும் கூட்டுறவுத்தறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:-

வெங்காயம் விலை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம். இன்னும் இரண்டு நாளில் ஒரு நல்ல செய்தி முதல்வர், துணை முதல்வரின் ஆலோசனையில் வெளிவரும். மழை காலங்களான நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்ந்து இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அம்மாவின் அரசு ஈடுபட்டுள்ளது.

தற்போது நடைபெற்ற கூட்டத்தில் வெங்காய விலை குறைப்பது குறித்தும், பதுக்கல் செய்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. நேற்று இருந்த விலையை காட்டிலும் தற்போது 4
ரூபாய் குறைந்துள்ளது. அம்மாவின் அரசு மக்களை பாதுகாப்பதில் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும்.

2010-ல் வெங்காய விலை ரூ.110 மற்றும் ரூ.140 என இருந்தது. அன்றைக்கு திமுக ஆட்சி இருந்தது. அன்றைய ரூபாய் மதிப்பு எவ்வளவு. இன்றைக்கு ரூபாய் மதிப்பு எவ்வளவு. இதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் அப்படியில்லை. 2011-ல் அம்மா ஆட்சியில் இருந்தபோது, விலை நிலைபடுத்தும் நிதியம் என்பதை ஏற்படுத்தியிருந்தார். அந்த நிதியம் மூலமாக வெங்காயத்தை குறைந்த விலைக்கு தரவேண்டும் என்று அம்மா தொடங்கி வைத்தார். அதன் மூலம் வெங்காய விலை கட்டுப்படுத்தப்பட்டது.

அதேபோல அம்மாவின் வாரிசாக இருக்கின்ற தமிழக முதல்வர் எங்களை அழைத்து ஆலோசனை செய்துள்ளார். அந்த ஆலோசனையில் அடிப்படையில் அம்மாவின் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும். பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் வெங்காயம் விலை 33 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. நாசிக்கில் இருந்து கொள்முதல் செய்து பேசி கொண்டிருக்கிறோம். குஜராத்தில் மழை பெய்துவருவதால் வெங்காய வரத்து குறைவாக உள்ளது.

மற்ற இடங்களிலிருந்தும் வரத்து குறைவாக உள்ளது. இதுபோன்ற நிலையில் நாம் எப்படி செயல்படலாம் என்பது குறித்து ஆலோசனை செய்துள்ளோம்..தேவையான அளவுக்கு கையிருப்பு உள்ளது. நாசிக் வெங்காயம் வெளியில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். இதனை நாங்கள் குறைவாக விலைக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்துவருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது:-

மாவட்ட வழங்கல் அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், பல பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். சில்லரை வியாபாரிகள் 10 மெட்ரிக் டன் வெங்காயம் தான் வைத்துக் கொள்ள வேண்டும். மொத்த வியாபாரிகள் 50 மெட்ரிக் டன் வெங்காயம்தான் வைத்து கொள்ள வேண்டும் என்று என்ற உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைக்கு ரூ 4 விலை குறைந்துள்ளது.

முதல்வர் கூட்டிய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் நாசிக் சென்றுள்ளார்கள். அங்கிருந்து வெங்காயத்தை வரவைப்பதா, அல்லது கர்நாடகத்திலிருந்து வரவைப்பதா என்று ஆலோசனை செய்து முதல்வரிடம் தெரிவிப்போம். இன்னும் இரண்டு நாட்களில் இது குறித்து நல்ல அறிவிப்பு வரும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.