தற்போதைய செய்திகள்

வெம்பக்கோட்டை ஒன்றிய மக்களுக்கு விரைவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி

விருதுநகர்

ெவம்பக்கோட்டை ஒன்றிய மக்களுக்கு விரைவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உறுதி அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர்களின் படங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பால்வளத் துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு தலைவர்களின் படங்களை திறந்து வைத்தார்.

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ்பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன், வெம்பக்கோட்டை யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் அக்ரிகணேசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 20 இடங்களிலும் கழக வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்த வெம்பக்கோட்டை ஒன்றிய வாக்காள பெருமக்களை நாங்கள் என்றும் மறக்கவே மாட்டோம். வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு பல்வேறு நலத் திட்டங்களை நாங்கள் தேடித்தேடி செய்ய உள்ளோம். வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு தொழிலுக்கு நாங்கள் என்றுமே பாதுகாப்பாக தான் இருப்போம்.

பட்டாசு ஆலைகளை யாரும் மூடவே முடியாது. பட்டாசு ஆலைகள் ஒரு மாதத்தில் மூடப்படும் என்று எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்தனர். அவர்கள் பொய் பிரச்சாரம் மக்களுக்கு தற்போது தெரியவந்துள்ளது. பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பாக இருந்த எங்களை நம்பி வாக்காளர்கள் இருபதுக்கு இருபது கவுன்சிலர்களை எங்களுக்கு வாரி வாரி வழங்கியுள்ளனர்கள்.

இன்று தமிழகத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். உள்ளாட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கட்சி, ஜாதி, மதம் பேதமின்றி மக்கள் பணியாற்ற வேண்டும். வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதிக்கு விரைவில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். அதன்பிறகு நானும் ராஜவர்மன் எம்எல்எவும் அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாக சென்று தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்போம். தாமிரபரணி தண்ணீா் வழங்கும் பட்சத்தில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் பற்றாக்குறை என்பதே ஏற்படாது.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் சேதுராமானுஜம், சாத்தூர் நகர செயலாளர் வாசன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை, ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் மகாலட்சுமி முத்துகிருஷ்ணன், மாலதி நல்லதம்பி, பொதுக்குழு உறுப்பினர்கள் வேலாயுதம் மற்றும் உள்பட சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.