விளையாட்டு

வெற்றியுடன் தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது – இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேட்டி…

லண்டன்:-

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் அரங்கேறிய தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 39.5 ஓவர்களில் 207 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டத்தில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டோம். நாங்கள் பெரிய ஸ்கோர் குவிக்க விரும்பினோம். ஆடுகளத்தின் தன்மை எங்களது திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. இருப்பினும் அனுபவத்துடன் கூடிய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.

இத்தகைய ஆட்டத்தை விளையாட கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம். பென் ஸ்டோக்ஸ் பேட்டிங், பந்து வீச்சு மட்டுமன்றி பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். பெலக்வாயோ அடித்த பந்தை பென் ஸ்டோக்ஸ் அருமையாக கேட்ச் செய்தார். மேட்ச் வின்னரான அவர் மற்ற வீரர்களுக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியவர். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.