தற்போதைய செய்திகள்

வெள்ளையத்தேவனுக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவ நடவடிக்கை – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி…

தூத்துக்குடி

சுதந்திரபோராட்ட வீரர் வெள்ளையத் தேவனுக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 249-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு, நாட்டு விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் மணிமண்டபங்கள், சிலைகள் கட்டப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அம்மா அவர்களின் நல்லாட்சியில் 65 மணிமண்டபங்கள், 4 நினைவு சின்னங்கள், 4 நினைவு தூண்கள் ஆகியவை கட்டப்பட்டு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர போராட்ட தியாகிகள் பிறந்தநாளினை அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதியாக விளங்கிய சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 249-வது பிறந்தநாள் விழா அன்னாரது மணிமண்டபத்தில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிமண்டபம், கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கத்துக்கு மணிமண்டபம், ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி.க்கு மணிமண்டபம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாருக்கு இல்லம், சீறாப்புராணம் இயற்றிய அமுதகவி உமறுப்புலவருக்கு மணிமண்டபம், சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

விளாத்திகுளத்தில் இசை மாமேதை நல்லப்பசுவாமிக்கு நினைவுத்தூண் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள் 70 சதவீதம் முடிவு பெற்றுள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்குள் இப்பணிகள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வல்லநாட்டு பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் வாரிசுதாரர்கள் மற்றும் பொதுமக்கள் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவனுக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவ கோரிக்கை வைத்தார்கள். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், திருவைகுண்டம் வட்டாட்சியர் எஸ்.சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நி.சையத் முகம்மத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.வெங்கடாசலம், இ.பாலசுப்பிரமணியன், முக்கிய பிரமுகர் செங்கண், கிராம நிர்வாக அலுவலர் எஸ்.ஆனந்தஜோதி, ஊராட்சி செயலர் டி.சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.