தற்போதைய செய்திகள்

வேடசந்தூர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் – சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்…

வேடசந்தூர் நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது வேடசந்தூர் தொகுதி உறுப்பினர் பரமசிவம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
வேடசந்தூரில் உள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் தனித்தனி கட்டடங்களில் செயல்பட அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளிக்கையில் உயர்நீதிமன்றத்தி்ன் பரிந்துரைபடி தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சொந்த கட்டடம் கட்டித்தரப்பட்டு வருகிறது. 2011-16ல் 713 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நீதிமன்ற கட்டடங்கள் கட்டித்தரப்பட்டன.

முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவியேற்ற பின்னர் புதிய நீதிமன்ற கட்டிடங்கள் கட்ட 1,142 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேடசந்தூரில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு தனித்தனி கட்டடங்கள் கட்ட வேண்டும் என உறுப்பினர் வலியுறுத்தி இருக்கிறார். அதனை அரசு பரிசீலிக்கும். அது தொடர்பாக அங்குள்ள நீதிபதியின் கோரிக்கையை பெற்று பொதுப்பணித்துறை மூலம் திட்டமதிப்பீடு தயார் செய்து, அதை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து பரிந்துரை பெற்ற பின்னர், கட்டடம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல லிப்ட் வசதி செய்து தர வேண்டும் என்றும் உறுப்பினர் கோரிக்கை வைத்தார்.

அது தொடர்பாகவும் உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பும் பரிந்துரையில் குறிப்பிட்டு அனுமதி பெற வேண்டும். அதன் அடிப்படையில் லிப்ட் வசதியும் அமைத்து தரப்படும் என்றார்.

அதனை தொடர்ந்து உறுப்பினர் பரமசிவம் கூறும்போது, வேடசந்தூர் பகுதியில் உள்ள ஆண்டிபட்டியில் கிரானைட் குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதற்கு தடை விதிக்க அரசு முன்வருமா? என்றார். அதற்கு அமைச்சர் சி.வி. சண்முகம் பதில் அளிக்கையில், கிரானைட் குவாரி தொடர்பாக விதிமுறைகளை மீறி செயல்படுமானால், மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.