தற்போதைய செய்திகள்

வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கக் கூடாது – சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை…

சென்னை:-

தனிப்பட்ட பிற நபரையோ, கட்சியினையோ குறித்து விமர்சனங்கள் செய்யக்கூடாது. பிற வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையினை விமர்சிக்கக்கூடாது என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்கிடவும், தேர்தல் குறித்த செய்திகள், விதிமீறல்கள் ஆகியவற்றை கண்டறியவும் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழுவால் சான்றளிக்கப்பட்ட விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடுவது தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆணையாளர் கோ.பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையாளர் தெரிவித்ததாவது : –

ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் மூலம் வழங்கப்பட்ட சான்று எண்ணுடன் கூடிய தேர்தல் விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் காட்சிகளை மட்டுமே ஊடகங்கள் வெளியிட வேண்டும். ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதியில்லாத தேர்தல் விளம்பரங்களை எக்காரணம் கொண்டும் நாளிதழ்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிடவோ, ஒளிபரப்பவோ கூடாது. சட்டத்திற்கு ஒத்திசைவாக இல்லாததும் ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தை பாதிப்பதும், உணர்ச்சியை தூண்டக்கூடியதும் அல்லது அதிர்ச்சி தரக்கூடிய, வெறுப்பு மற்றும் புரட்சியை தூண்டுகிற விளம்பரங்களை நாளிதழ்களோ, தொலைக்காட்சிகளோ வெளியிடவோ, ஒளிபரப்பவோ கூடாது.

ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகளாக இனம் காணும் அனைத்து செய்திகளும் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவினக் கணக்கில் சேர்ப்பதற்காக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்கப்படும்.

ஊடகங்கள், குறிப்பிட்ட சில வேட்பாளர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்யும் செய்திகளை மீண்டும் மீண்டும் வெளியிடுதல், குறிப்பிட்ட வேட்பாளர், சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரிடமும் ஆதரவு பெற்றுள்ளார் என்றும், அவர்தான் தொகுதியில் வெற்றி பெறுவார் என்றும் வரும் செய்திகள், ஒரே வேட்பாளரை குறித்து அவரது வெற்றி வாய்ப்பை பெரிதாக கூறி மீண்டும் மீண்டும் பேசுவது போன்ற செய்திகள் பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகளாக கருதப்படும்.

வேட்பாளர்கள் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் இரண்டு நாட்களுக்கு முன்பாகவும், சுயேட்சைகள் மூன்று நாட்களுக்கு மூன்பாகவும் விண்ணப்பிக்க வேண்டும். விளம்பரங்கள் தனிப்பட்ட பிற நபரையோ, கட்சியினையோ குறித்து விமர்சனங்கள் செய்யக்கூடாது. பிற வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையினை விமர்சிக்கக்கூடாது. விளம்பரங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ, வன்முறையை தூண்டும் விதமாகவோ (சாதி, மத, இன) இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர், இணை ஆணையாளர் ஆர்.லலிதா, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.சண்முக சுந்தரம், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர், துணை ஆணையாளர் (கல்வி) பி.குமாரவேல் பாண்டியன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள்/வட்டார துணை ஆணையாளர்கள் எஸ்.திவ்யதர்ஷினி, பி.என்.ஸ்ரீதர், டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், ஊடக நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.