தற்போதைய செய்திகள்

வேலம்பாளையத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் திறப்பு – அமைச்சர்கள் பங்கேற்பு

ஈரோடு

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், வேலம்பாளையம் பகுதியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.கே.சி.கருப்பணன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தினை திறந்து வைத்து, 50 பயனாளிகளுக்கு ரூ.20.11 லட்சம் மதிப்பிலான விலையில்லா கறவை மாடுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்.கே.சி.கருப்பணன் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் முதலமைச்சர் அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, வீடு இல்லாதவர்களுக்கு பசுமை வீடுகள், வீட்டுமனை பட்டாக்கள், நான்கு வழி சாலை வசதிகள், மேம்பாலங்கள், விவசாயிகளுக்கு மானிய விலையில் சொட்டு நீர் பாசனம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா வெள்ளாடுகள், விலையில்லா நாட்டுக்கோழிகள் ஆகியவை வழங்குவது மட்டுமல்லாமல், அவற்றிற்கு தீவனம், மருத்துவ சிகிச்சைகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மாட்டினங்களை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் வரும் 9-ந் தேதி ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 1700 ஏக்கர் பரப்பளவில் தெற்காசியாவிலேயே மிக பிரம்மாண்டமான கால்நடை பூங்கா அமைக்க விரைவில் அடிக்கல் நாட்ட இருக்கிறார். தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.7.5 லட்சம் மானியத்தில் மின்சார புல் நறுக்கும் கருவி 50 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் ரூ.45 லட்சம் மானியத்தில் மின்சார புல் நறுக்கும் கருவி கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 210 அலகுகள் மற்றும் ஈரோடு ஆவின் மூலம் 90 அலகுகள் என 300 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோள்ட்டாட்சியர் ஜெயராமன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், வேலம்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் கே.சி.கணேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சிவகாமி சரவணன், கே.கே.விஸ்வநாதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், பவானி யூனியன் சேர்மன் பூங்கோதை வரதராஜ், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, ஊராட்சி செயலாளர் கே.என்.ஆறுமுகம், உஷா மாரியப்பன், அஷ்ரப் அலி, தங்கராசு, மாதேஸ்வரன், விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.